வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:05 (28/06/2018)

கட்டுமானப் பணிகளுக்கு நடுவே விழுந்த விமானம்! தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழப்பு

மும்பையில் சிறிய ரக விமானம் கட்டுமானப் பணிகளுக்கிடையே விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

விமான விபத்து

மும்பையில் இன்று பிற்பகல், விமானப்படையைச் சேர்ந்த C90 டர்போராப் என்ற விமானம் கட்க்ஜோர் பகுதியில் உள்ள ஜக்ருதி கட்டடத்துக்கு அருகில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு நடுவே விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் விமான ஓட்டிகள் இரண்டு பேர் மற்றும் பராமரிப்புப் பொறியாளர்கள் இரண்டு பேர் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம் மோதியதில் தரையில் இருந்த ஒரு தொழிலாளியும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு விரைந்து தீயை அணைத்தனர். விபத்தில் சிக்கியுள்ள 5 பேரில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.