வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (28/06/2018)

பணத்துக்காக மனைவி, மகள்களை விற்க முயன்ற தந்தை! - ஆந்திராவில் நடந்த அவலம்

கடன் பெறுவதற்காகத் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விலைக்கு விற்க முயன்றிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர். 

கடன்

(Photo credit -Ndtv)

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கொயிலகுன்ட்ல (Koilakuntla) பகுதியைச் சேர்ந்தவர் பசுப்புலெட்டி. இவருக்கு, வெங்கடமா என்ற மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பசுப்புலெட்டி, தான் சம்பாதிக்கும் பணத்தைக் குடிக்காகச் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், 5 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்காக மனைவி, குழந்தைகளை விற்கத் துணிந்திருக்கிறார். இதனால், அவரைக் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பாகப் போலீஸார் கூறுகையில், `குடிப்பழக்கத்துக்கு அடிமையான பசுப்புலெட்டி (Pasupuleti Maddileti), பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் மகள் மற்றும் குழந்தைகளை விற்க முயற்சி செய்துள்ளார். உறவினர் ஒருவரிடம் தன் மகள் பூப்படைந்து, திருமண வயதுக்கு வந்தவுடன், திருமணம் செய்து வைப்பதாகக் கூறி கடந்த மாதம் ரூ.1.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதற்கான கடன் ஒப்பந்த பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டிருக்கிறார். இந்நிலையில், மகளைத் திருமணம் செய்துதருமாறு உறவினர் நச்சரித்துள்ளார்.

இதனால், 17 வயதான மகளைத் திருமணம் செய்து தர முடிவு செய்துள்ளார். இதைத் தட்டிக் கேட்ட மனைவியிடம், `இது எனது விருப்பம், என் குழந்தைகளை என்ன வேண்டுமானாலும் செய்வேன்' எனக் கூறியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், மனைவி மற்றும் குழந்தைகளை ஐந்து லட்சத்துக்காக விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கிறார். அதற்கான கடன் பத்திரத்தில் கையெழுத்து இட மனைவியை வற்புறுத்தியிருக்கிறார். மனைவியின் புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம். இவருக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பது தெரியவந்துள்ளது' என்றார்.