வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:27 (28/06/2018)

தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சந்தையில் சரிவு 28.06.2018

வர்த்தக யுத்தம், ரூபாயின் மதிப்பு குறைந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலை பற்றிய கவலை உட்பட பல காரணங்களால், இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய நஷ்டத்துடன் முடிவடைந்தது.

கடந்த வர்த்தக தினத்தில் கண்டது போலவே, இன்றும் மிகச் சில நிமிடங்கள் மட்டுமே சந்தை பாசிட்டிவ் திசையில் இருந்தது. 

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 179.47 புள்ளிகள் அதாவது 0.51 ச தவிகிதம் சரிந்து 35,037.64 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 82.30 புள்ளிகள் அதாவது 0.77 சதவிகிதம் சரிந்து 10,589.10-ல் முடிவுற்றது.

வர்த்தக யுத்தம் பற்றிய கவலை அதிகரித்து வரும் காரணத்தால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் தொய்வடைந்த நிலையிலேயே இருந்தன.

கச்சா எண்ணெய் இன்று சிறிதளவு விலை குறைந்திருந்தாலும், தற்போதைய அதிகபட்ச விலையில் அது தொடர்ந்து இருக்குமேயானால், தன்னுடைய பெரும்பான்மையான கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவுக்கு அது சாதகமான விஷயமல்ல.

ஏற்கெனவே, நடப்பு கணக்கு பற்றாக்குறை பற்றிய நெருடல் மிகுந்திருக்கும் நிலையில், இது பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கக்கூடும்.

மேலும், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக டாலருக்கு 69 ரூபாய் என்ற நிலைக்கும் கீழிறங்கி 69.10 என்ற நிலையைத் தொட்டது. பின்னர், அது சற்று சுதாரித்து டாலருக்கு 68.76 என்று வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஆயில், ரியல் எஸ்டேட் மற்றும் மருத்துவத்துறை பங்குகள் பெரும்பாலும் சரிவைக் கண்டன. ஆட்டோமொபைல், வங்கி, பவர் மற்றும் எப்.எம்.சி.ஜி துறைகளிலும் பெரிய அளவில் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. சில கேப்பிடல் கூட்ஸ், டெலிகாம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவங்களின் பங்குகள் சற்று முன்னேறின. 

இன்று விலை சரிந்த பங்குகள் :

டெக் மஹிந்திரா   7%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 4.7%
டைட்டன்  4%
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 4%
பாரத் பெட்ரோலியம் 3.7%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்  2.9%
டாடா மோட்டார்ஸ் 2.6%
கெயில் 2.6%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 2.1%
கோல் இந்தியா 2%

விலை அதிகரித்த பங்குகள் :

என்.டி.பி.சி  1.8%
கோடக் பேங்க்  1.6%
மஹிந்திரா & மஹிந்திரா  1.6%
ஹின்டால்கோ 1.5%
பார்தி ஏர்டெல்  1.4%
இன்ஃபோசிஸ் 1.1%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,821 பங்குகள் சரிவைக் கண்டன. 798 பங்குகள் லாபத்துடனும் 144  பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.