வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (28/06/2018)

கடைசி தொடர்பு:08:43 (29/06/2018)

`மலையாள நடிகர் சங்க சர்ச்சை' - கடிதம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் திலீப்

'வழக்கில் நிரபராதி என நிரூபிக்கும் வரை எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை' என மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான 'அம்மா'வுக்கு நடிகர் திலீப் கடிதம் எழுதியுள்ளார்.

திலீப்

பிரபல நடிகையைக் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக மோகன்லால் பதவியேற்றதைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து ரீமா கலிங்கல் உள்ளிட்ட 4 மலையாள நடிகைகள் 'அம்மா' சங்கத்திலிருந்து வெளியேறினர். தமிழ் நடிகை ரேவதி தலைமையில் மூன்று நடிகைகள் மீண்டும் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனக் காட்டமாகக் கடிதம் எழுதியிருந்தனர். திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரத்தால் நடிகர் சங்கப் பிரச்னையில் சினிமா கலைஞர்களைத் தாண்டி அரசியல் பிரமுகர்களும் கருத்து கூறினர். இந்த நிலையில், நடிகர் சங்கம் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக நடிகர் திலீப் 'அம்மா' சங்கச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

திலீப் அனுப்பியுள்ள கடிதத்தில், ``மலையாள நடிகர் சங்கத்திலிருந்து வெளியேற்றுவது குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பாமலும் என்னுடைய விளக்கத்தைக் கேட்காமலும் முந்தைய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ரத்து செய்த 'அம்மா' சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முந்தைய தீர்மானம் ரத்து செய்யப்பட்டது குறித்து மீடியாக்களில் வெளியான செய்தி மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை நான் எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை. என்னால் 'அம்மா' அமைப்பை பலர் அவதூறாக பேசுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது. திலீப்பின் கடிதத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட சர்ச்சைகள் சற்று தணிந்துள்ளன. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் வாய் திறந்தால்தான் சர்ச்சைகள் தீர்க்கமான முடிவை எட்டும்.