வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:09:00 (29/06/2018)

தமிழ்நாடு, கேரளாவை நோக்கிப் படையெடுக்கும் வட இந்தியர்கள்!

இந்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் ஒடியா மொழி பேசும் வட இந்தியர்கள், தமிழ்நாடு, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் அதிகளவில் இடம் பெயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

வட இந்தியர்கள்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வட இந்தியர்கள் தென் இந்தியாவில் குடியேறுவது கணிசமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், தமிழர்கள் மற்றும் கேரள மாநிலத்தவர்கள் வட இந்திய நகரங்களில் குடியேறும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உயர் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தென் இந்திய நகரங்களுக்கு வருகின்றனர் வட இந்தியர்கள். கடந்த 2001-ம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய வட இந்தியர்களின் எண்ணிக்கை 58.2 லட்சமாக இருந்தது. ஆனால், 2011-ம் ஆண்டில் குடியேறிய வட இந்தியர்களின் எண்ணிக்கை 77.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, கடந்த 2001-ம் ஆண்டில் தமிழர்கள் வட இந்திய நகரங்களில் சுமார் 8.2 லட்சம் பேர் குடியேறியுள்ளனர். ஆனால், 2011-ம் ஆண்டில் 7.8 லட்சமாகக் குறைந்துள்ளது. இதேபோல், வட மாநிலங்களில் கேரள மக்கள் குடியேறும் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

தென்மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு, உயர் கல்வி, பொருளாதார மேம்பாடு, அமைதியான சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களுக்காகவே பெரும்பாலான வட இந்தியர்கள், தென் இந்தியாவில் குடியேறியுள்ளனர். மேலும், உத்தரப் பிரதேசம் பீகார், அசாம், நேபாளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிகமானோர் தமிழகம் மற்றும் கேரளாவில் குடியேறியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.