வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (29/06/2018)

கடைசி தொடர்பு:16:40 (29/06/2018)

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் தொடரும் மாற்றங்கள் - பகுதி நேரத் தலைவராக கிரிஷ் சதுர்வேதி நியமனம்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு வங்கி சாராத பகுதி நேரத் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவராக இருந்தவர் சந்தா கோச்சார். இந்த வங்கி, வீடியோகான் குழுமத்திற்கு வழங்கிய கடனில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சந்தா கோச்சாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், இவரின் கணவருடன் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத், பல்வேறு வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சந்தா கோச்சார் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு, வங்கி சாராத பகுதி நேரத் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதிக்குப் பிறகு, ஜூலை 1-ம் தேதி இவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது. இவர், மூன்று ஆண்டுக்காலம் இந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் சதுர்வேதி, 1977-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். இவர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தில் செயலராகப் பணியாற்றினார். மேலும், நிதித்துறை கூடுதல் செயலராகவும் பணியாற்றியுள்ளார். ஐ.டி.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவிலும் இடம்பெற்று பணியாற்றிய அனுபவம் உள்ளது. 

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது குறித்து கிரிஷ் சதுர்வேதி கூறுகையீில், ’’எனக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடமிருந்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. வங்கி என்னுடைய பயோ டேட்டாவை கேட்டுள்ளது. தலைவர் பதவியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன். இந்தப் பதவியில் சிறப்பாகச் செயல்பட, நிதித்துறையில் ஏற்கெனவே உள்ள அனுபவங்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.