`நான்கு நாளில் ரூ.50 கோடி வசூல்' - புதுச்சேரி வரலாற்றை மாற்றிய கிரண்பேடி!

நான்கே நாளில் ரூ.50 கோடி அளவுக்கு அரசுக்கு வர வேண்டிய தொகையை வசூல் செய்து புதுச்சேரி வரலாற்றை மாற்றியிருக்கிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.

கிரண்பேடி


புதுச்சேரி மின்துறைக்கு வர வேண்டிய மின் கட்டண பாக்கித் தொகை சுமார் 120 கோடி ரூபாய் அளவுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அந்த மின் கட்டணத் தொகையை செலுத்தாதவர்களில் பலர் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசியல்வாதிகள். அதனால் மின் கட்டண பாக்கி வைத்திருக்கும் அனைவரின் பெயர்களையும் செய்தித் தாள்களில் வெளியிடுமாறு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அப்படி வெளியிட்டதன் எதிரொலியாகப் புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த நான்கு நாள்களில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டண பாக்கித் தொகை வசூல் ஆகியுள்ளது. ஆளுநர் கிரண்பேடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தேசிய புள்ளி விவர தின விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ``புதுச்சேரி அரசு எடுத்து வந்த தொடர் நடவடிக்கையின் காரணமாகவே மின்துறையில் தற்போது அதிக அளவில் மின் கட்டண பாக்கி வசூலாகியுள்ளது. ஆனால் ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய நடவடிக்கையால்தான் அதிகளவு மின் கட்டண பாக்கி வசூலானதாகப் பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல உள்ளாட்சித் துறையில் வீட்டுவரி, தொழில் வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்டவை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!