வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (30/06/2018)

கடைசி தொடர்பு:15:05 (30/06/2018)

பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்த குடும்பத்தினருக்கு நடந்த துயரம்!

மத்தியப் பிரதேசத்தில் பட்டியலின குடும்பத்தினர் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தற்காக, இரண்டு ஆண்டுகள் கிராமத்தை விட்டு வெளியேற கிராமப் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

பட்டியலின குடும்பத்தினர்

(Photo Credit - ANI)

மத்தியப் பிரதேச மாநிலம், திகம்கார் என்ற கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த பூனம் என்பவர் கூறுகையில், `எனது மருமகள் சர்கான்பூர் என்ற பக்கத்துக் கிராமத்தில் வசித்து வருகிறாள். அங்கு, பொதுக் கிணறு ஒன்று உள்ளது. அதில், தண்ணீர் எடுப்பது பிரச்னையாக இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மருமகள் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி  கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, பஞ்சாயத்தைக் கூட்டினர் ஊர் மக்கள். இரு தரப்பு வாதங்களைக் கேட்டபின்பு, இரண்டு ஆண்டுகள் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பையடுத்து குடும்பத்தினருக்கு ரேஷன் உணவுப் பொருள்களை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், பள்ளியிலிருந்து குழந்தைகளையும் நீக்கியுள்ளனர். மேலும், குடும்பத்தினர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுக்கின்றனர். உள்ளூர் கடைக்காரர்கள் உட்பட அனைவரும் மருமகள் குடும்பத்தினரைப் புறக்கணித்துள்ளனர்' என்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்பின்னர் சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த திகம்கார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் ஜெயின், `இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க உதவி கோட்ட காவல் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். விசாரணை முடிந்தபிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.