வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/06/2018)

கடைசி தொடர்பு:19:40 (30/06/2018)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

குமாரசாமி


பல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. காவிரி விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடகம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாகக் கர்நாடகத்தில், அம்மாநில முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில எம்.பி-க்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகம் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அம்மாநில எம்.பி-க்களுக்கு நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து பிரச்னையைக் கிளம்பவும் கர்நாடகா தீர்மானித்துள்ளது.