வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (30/06/2018)

ஓராண்டானது ஜி.எஸ்.டி அமல்! கொண்டாட இருக்கிறது மத்திய அரசு

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், நாளை (1.7.2018) ஜி.எஸ்.டி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜிஎஸ்டி

PC :Total Tv

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் கடந்தாண்டு ஜூலை 1-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த தொடக்க விழா மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை பலர் ஆதரித்தும் பலர் எதிர்த்தும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தினர். சரக்கு மற்றும சேவை வரிச்சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதுவரை அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தன. இந்த முறையை மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம் என மத்திய அரசு கூறிவருகிறது. இந்நிலையில் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நாளை ஜி.எஸ்.டி நாளாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக டெல்லி அம்பேத்கர் பவனில் நடைபெறும்  நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.