வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (30/06/2018)

ஜிஎஸ்டி-க்குப் பிறகு பிராண்டட் நகை விற்பனை அபார வளர்ச்சி!

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பிராண்டட் நகை விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நகை விற்பனை

நாடு முழுவதும், கடந்த 2017 -ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரி அறிமுகம்செய்யப்பட்டது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி-க்குப் பிறகு நகைகள் வாங்குவதில் வாடிக்கையாளர்களின் மன நிலையில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தங்க நகையின் சந்தை மதிப்பு 7,500 கோடி டாலராக (சுமார் ரூ.5,10,000 கோடி) இருக்கிறது. பிராண்டட் நகைக் கடைகளில் அதிக அளவில் நகைகள் வாங்கத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஹால் மார்க், பில் பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மை, சலுகைகள் ஆகியவற்றினால்  பிராண்டட்  நகைக் கடைகளில் விற்பனை சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும், கடந்த ஆண்டு தங்க நகை விற்பனைச் சந்தை சரிவு கண்டிருந்தபோதிலும், பிராண்டட் நகைக் கடைகளின் பங்களிப்பு 6 முதல் 7 சதவிகிதம் வரை உயர்வு கண்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிராண்டட் நகைக் கடைகளின் சந்தைப் பங்களிப்பு 22 முதல் 23 சதவிகிதமாக இருந்தது. இது, 2018 -ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 29 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நகைக்கான சந்தை, வரும் 2023-ம் ஆண்டுக்குள் 31 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் நகைச் சந்தை,  கடந்த 2014 நிதியாண்டு முதல் 2018 வரை வளர்ச்சி இல்லாமல் இருந்தது.  இந்தக் காலகட்டத்தில், நகை விற்பனை மற்றும் விலை அதிகரிக்கவில்லை.  

 நாட்டிலுள்ள முன்னணி 17 தங்க நகை விற்பனைக் கடைகளில், குறிப்பாக தனிஷ்க், தங்க மயில் போன்ற பிராண்டட் நகைக் கடைகளின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 11 சதவிகிதமாக இருந்தது.  பிராண்டட் நகைக் கடைகளில் நகை சேமிப்புத் திட்டம், சேதாரம் தள்ளுபடி, விலையில் சலுகை போன்றவற்றை அளிப்பதால், அதை நாடி பலரும் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். வரும் 2022-ம் ஆண்டுக்குள்,  பிராண்டட் நிறுவனங்கள் 42 சதவிகித வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .

வாடிக்கையாளர்கள், அதிக நவீன மாடல்களை விரும்புவதால், பாரம்பர்ய நகை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்பு சாராத நகைக்கடைகள், பணம் மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் ஹால்மார்க் முத்திரை, வட்டிக்கு பணம் வாங்குதல், போன்றவற்றினால் சிக்கலை சந்தித்துவருகிறார்கள்.  நகைத்தொழிலுக்குத் தேவையான பணம்  கடனாகக் கிடைக்காத காரணத்தால், அதை விரிவாக்கம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  இவர்களின் இளைய தலைமுறையினர், நகைத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டாத நிலையால், குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.