இந்தியர்களின் கறுப்புப் பணம் அதிகரித்துள்ளதா... என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர்? | is Black money of Indians increase in Swiss bank ? an economist explains

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (01/07/2018)

கடைசி தொடர்பு:09:04 (01/07/2018)

இந்தியர்களின் கறுப்புப் பணம் அதிகரித்துள்ளதா... என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர்?

இந்தியர்களின் கறுப்புப் பணம் அதிகரித்துள்ளதா... என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர்?

றுப்புப் பணம் தொடர்பான விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்; அதேபோல் அதுதொடர்பான விவரங்களை எதிர்க்கட்சிகளும் கவனஈர்ப்புத் தீர்மானம் மூலம் கேட்டுப் பெறலாம் என்று பொருளாதார நிபுணர்களும், அரசியல் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் கறுப்புப் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான தகவல் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டில் 45 சதவிகிதம் குறைந்திருந்த நிலையில், 2017-ல் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்தத் தகவல் கூறுகிறது.

இந்த விவகாரத்தில் ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன.

இதன் அடுத்தக்கட்டமாக, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அருண் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மற்றொரு மத்திய அமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அவர் தன் பேஸ்புக் பதிவில், "சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார். 

புகைந்து கொண்டிருக்கும் கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, பொருளாதார நிபுணர் எம்.ஆர். வெங்கடேஷிடம் இதுபற்றிக் கேட்டபோது, "கறுப்புப் பணம் என்பதை ஒரு நாளிலோ, ஒரு நடவடிக்கையிலோ, ஒரு செயலின் மூலமோ ஒழித்துவிட முடியாது. தவிர, பி.ஜே.பி. தலைமையிலான இந்த அரசாங்கம் வந்தபின்னர், கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, உச்ச நீதிமன்றத்தால் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டது. அந்த எஸ்.ஐ.டி. இப்போதுவரை, பெரிசா எதுவும் பண்ணியதாகத் தெரியவில்லை. அந்தக் குழுவிடம் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அதிகாரிகள், நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் போன்றவை பணியாற்ற முடியவில்லை; அதனால் எஸ்.ஐ.டி. அமைக்க வேண்டும் என்றுவெங்கடேஷ் கோரி உருவாக்கப்பட்ட அந்தக் குழுவிற்கு வருவாய்த் துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர், மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர், ரா அமைப்பின் இயக்குனர், அமலாக்கத்துறை இயக்குனர் போன்றோர் உதவி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதால்தான், எஸ்.ஐ.டி.யே அமைக்கப்பட்டது. தற்போது, தனித்தனியாக யார்யாரெல்லாம் செயல்படவில்லை என்று சொல்லப்பட்டதோ, அவர்கள் உதவியுடனேயே எஸ்.ஐ.டி உருவாக்கப்பட்டது. 

இப்போது அரசாங்கத்தின் சார்பிலான கறுப்புப் பணம் மீட்பானது, அரசின் கையிலோ, அதிகாரிகளின் கைகளிலோ இல்லை. அது அவர்களை விட்டுப்போய் உச்ச நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. இந்த அரசு ஏற்பட்டவுடன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே எஸ்.ஐ.டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசு, கறுப்புப்பண விவகாரத்தில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை உச்ச நீதிமன்றம்தான் சொல்லவேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தை யாரும் அதுபற்றிக் கேட்க முடியவில்லை.

எஸ்.ஐ.டி. அமைத்தார்களே தவிர, அதற்கென்று ஒரு அலுவலகமோ, செயலாளரோ இல்லை. இரண்டு நீதிபதிகளை நியமித்ததோடு சரி. அவர்கள் என்ன செய்ய வேண்டும், அதற்கான கால அவகாசம் என்ன, எப்போது முடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் எந்த வரையறையும் இல்லை. இதன்காரணமாக, கறுப்புப் பணம் தொடர்பாக அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி.-யின் செயல்பாடுகள் நீர்த்துப் போய் விட்டன. இந்த அரசு வந்தபின்னர் நடந்தவைகளுக்கே நாங்கள் பொறுப்பேற்று தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று தெரிவிக்கும் வெளிநாட்டு வங்கிகள், 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய தகவல்களைத் தெரிவிக்க முடியாது என்கிறது.

இனிமேல் இந்தியர்கள் யாரேனும் வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கினால், அதுபற்றிய தகவல்களைத் தருகிறோம் என தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்ட நபரின் பெயர், அவரின் முகவரி, பாஸ்போர்ட் எண் போன்ற உரிய தகவல்களைத் தெரிவித்தால் மட்டுமே அவர்களின் பணம் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க முடியும் என்பதே அவர்களின் கூற்று. 

இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் 50 சதவிகிதம் முதலீடு அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டாலும், அந்தத் தொகை எவ்வளவு என்பது புள்ளிவிவரங்களாக வெளியிடப்படவில்லை. எந்த அளவில் இருந்து, தற்போது எந்த அளவாக உயர்ந்திருக்கிறது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. அதுபற்றிய புள்ளிவிவரங்களை யாரும் வெளியிடவில்லை. 

ஒரு வங்கியில் கொடுத்த தகவல் என்பதாலேயே அந்தப் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடனேயே இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பணம் முதலீடு வைத்திருக்க வேண்டும் என்பதுதான் யூகம். ஆனால், அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சுவிஸ் வங்கி போன்ற வங்கிகளில் கறுப்புப் பணமும் இருக்கும். முறைப்படியான பணமும் இருக்கக்கூடும். ஓராண்டுக்கு சுமார் ஒரு கோடி வரை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம் என்று எடுத்துக் கொண்டால், மிக அதிகளவில் லாபம் ஈட்டுவோர், அதுபோன்ற தொகையை வெளிநாட்டு வங்கியில் செலுத்த வாய்ப்புண்டு. அது சட்டப்பூர்வமானதே. அவையெல்லாமும், அண்மையில் வெளியான தகவலில் இடம்பெற்றிருக்கும். 

Swiss bank

இதுபோன்ற சூழலில் இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட் அடிப்படையில் முதலீடு செய்திருக்கிறார்களா அல்லது வேறு அடிப்படையிலா என்பது பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லாதவரை எதுவும் சொல்லிவிட முடியாது. சில கணக்குகள், வெறும் நம்பர்களைக் கொண்டே அடையாளம் காணப்படும். 

இந்த டேட்டா அடிப்படையில் வெளிநாட்டில் இந்தியர்களின் பணம் இருக்கிறது. அது கறுப்பா அல்லது சட்டப்பூர்வமான பணமா என்பதை  தீர்க்கமான ஆய்வுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும். இந்தப் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை மத்திய அரசு மெத்தனமாக சட்டப்பூர்வப் பணம் என்று சொல்லிவிட முடியாது. என்றாலும், அதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. மத்திய அமைச்சர் என்ற முறையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுவாகக் கூறுவதோடு, நிறுத்திக் கொள்ளாமல் குறிப்பிட்ட காலக்கெடுவை அருண் ஜெட்லி அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பாக அறிக்கை வைக்கிறோம். அதற்கு ஒருமாத கால அவகாசம் வேண்டும் என்று சொன்னால் நன்று. அதேபோல் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு தகவல் வெளியானதாலேயே, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தும் கறுப்புப் பணம் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. அது தவறான அணுகுமுறை. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, கறுப்புப் பணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, அதுதொடர்பான பட்டியலைக் கொண்டுவந்து, வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தலாம். கறுப்புப் பணம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பதையும் ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சிகள் கோர வேண்டும். மற்றபடி இந்தத் தகவலின் பின்னணியில் உள்ள அரசியலுக்குள் போக விரும்பவில்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்