சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்..! நெஞ்சை உலுக்கும் தந்தையின் கண்ணீர்

மத்திய பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டதை போன்று இந்த சிறுமியும் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமி

மத்தியப் பிரதேச மாநிலம், மான்டசூர் பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக, எட்டு வயது சிறுமி தனது தாத்தாவுக்காக காத்திருந்தார். அப்போது, அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத சிறுமியைத் தேடிய பெற்றோர், போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு, கழுத்தறுத்த நிலையில் பேருந்தில் இருந்து சிறுமியை மீட்டனர் போலீஸார். மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, இரண்டு அறுவைச் சிகிச்சை முடிந்துள்ள நிலையிலும், அபாய கட்டத்தில் இருந்து மீளவில்லை. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று மத்தியப் பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிர்பயாவை போன்று இந்த சிறுமியும் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ம.பி மாநில பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், `பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அவரின் தந்தையின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்' எனக் கூறினார். 

சிறுமி

இதற்கு, `அரசு சார்பில் வழங்கப்படும் எந்த இழப்பீடும் வேண்டாம். என் 8 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட்டு தண்டிக்க வேண்டும்' என சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

Picture Courtesy: ANI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!