வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (01/07/2018)

கடைசி தொடர்பு:14:04 (01/07/2018)

ஒரே வீட்டில் கண்களைக் கட்டிய நிலையில் 11 பேர் மரணம்! டெல்லியில் நடந்த கொடூரம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் 4 ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் ஒரு வீட்டின் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லி

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ளது புராரி சாண்ட் நகர். இந்தப் பகுதியில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் குடும்பத்தினர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். மேலும், ப்ளைவூட் வணிகத் தொழிலையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லி

இது குறித்து போலீஸார் கூறுகையில், `உயிரிழந்த குடும்பத்தினர் நடத்திவரும் மளிகைக் கடையை எப்போதும் காலை 6 மணிக்கெல்லாம் திறந்து விடுவார்கள். ஆனால், இன்று 7.30 மணியாகியும் கடை திறக்கவில்லை. அதனால், அருகில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் உள்ள இரும்புக் கிரில் உத்தரத்தில், கண் மற்றும் வாயை கட்டியவாறு தூக்கில் தொங்கிய சடலங்களைப் பார்த்துள்ளனர். அவர்களது கை மற்றும் கால்கள் இறுக்கக் கட்டப்பட்டிருந்தது. 3 சிறுவர்கள், 75 வயதான ஒரு முதியவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சடலங்களைக் கைப்பற்றிய போலீஸார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகப்படுகிறது' எனத் தெரிவித்தார்.