வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (01/07/2018)

கடைசி தொடர்பு:10:11 (02/07/2018)

நீரவ் மோடி மோசடி வழக்கு... வழக்கறிஞர்களுக்கு மட்டும் 20 கோடி ரூபாய் செலவு!

நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாத மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய நிலையில், அவரைக் கைது செய்ய இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அமெரிக்காவில் நீரவ் மோடி நிறுவனத்தின் திவால் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2.7 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாத மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய நிலையில், அவரைக் கைது செய்ய இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அமெரிக்காவில் அவரது  நிறுவனத்தின் திவால் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 2.7 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீரவ் மோடி

தப்பி ஓட்டம்

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரும் கீதாஞ்சலி நகை நிறுவன அதிபருமான மெஹூல் சோக்ஸியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் உத்தரவாத கடிதம் பெற்று, 13,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாத மோசடி செய்தது தொடர்பாக, அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குநரகமும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு முன்பாகவே, கடந்த ஜனவரி மாதம் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டனர். நீரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு இ-மெயில் மூலம் சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் வெளிநாட்டில் வியாபாரத்தைக் கவனிக்க வேண்டி உள்ளதாகக் கூறி, விசாரணைக்கு வர மறுத்துவிட்டார்.

46 வயதான நீரவ் மோடி, 'ஃபயர் ஸ்டார்' என்ற பெயரில் பிரபலமான வைர நகை கடைகளை நடத்தி வந்தார். டெல்லி, மும்பை, சூரத் போன்ற ஊர்களிலும் வைர நகை விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. மேலும் லண்டன், நியூயார்க், லாஸ் வேகாஸ் ஹவாய் தீவுகள், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவு என உலகின் பல இடங்களில் அவருக்கு நகைக்கடைகள் உள்ளன.

இந்த நிலையில், தப்பி ஓடிய நீரவ் மோடியை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அவர் லண்டன், ஹாங்காங், பாரீஸ் போன்ற நாடுகளுக்குப் போலி பாஸ்போர்ட்கள் மூலம் தப்பித்து செல்வதாக வந்த தகவலையடுத்து, அவரைப் பிடிக்க உதவும்படி இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது.

சொத்துக்களைப் பாதுகாக்க திவால் மனு

இதனிடையே நீரவ் மோடி மற்றும் அவருக்குச் சொந்தமான நகைக்கடைகளின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், உஷாரான நீரவ் மோடி தனது சொத்துக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு அம்சமாக, அமெரிக்காவில் உள்ள தங்கள் கம்பெனிகளைத் திவாலானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ஃபயர்ஸ்டார் வைர நிறுவனம் சார்பில், நியூயார்க் நகரில் உள்ள திவால் அறிவிப்புக்கான நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வைத்தார்.

இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், ஃபயர்ஸ்டார் நிறுவனத்துக்குக் கடன் அளித்தவர்கள் அதனை வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், நீரவ் மோடியின் இந்தத் திவால் வழக்கில் ஆஜராவதற்காக அமெரிக்க அரசின் நீதித் துறை ( Department of Justice- DoJ) உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட அளவிலான வழக்கறிஞர்களுக்கு, கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களில் மட்டும் 2.74 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 நீரவ் மோடி

மலைக்க வைக்கும் வழக்கறிஞர்கள் செலவு

இதுபோன்ற திவால் நோட்டீஸ் வழக்கில், நிபுணத்துவம் வாய்ந்த பிரபல வழக்கறிஞர் ரிச்சர்டு லெவின் என்பவரை அரசு சார்பில் ஆஜராவதற்காக அமெரிக்க அரசின் நீதித் துறை நியமித்துள்ளது. திவால் வழக்கைக் கையாள்வதில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் ரிச்சர்டு லெவின். இவருக்கு இவ்வழக்கில் ஆஜராவதற்காகக் கடந்த மூன்று மாதங்களில் 3,62,148 டாலர் கட்டணமாக அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கணக்கு மற்றும் நிதி ஆலோசகருக்கு 5,51,202.50 டாலர், ஆய்வாளருக்கு 37,288 டாலர், சட்ட நிறுவன ஆய்வாளருக்கு 3,11,609.03 டாலர், நிதி புலனாய்வு ஆலோசனை ஆய்வாளருக்கு 1,72,475.30 டாலர், இன்னொரு சட்ட நிறுவன ஆய்வாளருக்கு 12,24,972.25 டாலர், வழக்கு ஆலோசகருக்கு 49,813.50 டாலர், அறிவுசார் சொத்து ஆலோசகருக்கு 37,480.25 டாலர் என மொத்தம் 27,46,988.43 டாலர் இந்த வழக்குக்காக இதுவரை அரசு சார்பில் செலவழிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கதை இதுவென்றால், வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகள், அப்படியே ஒருவேளை கொண்டு வந்தாலும் அதன் பின்னர் அவர் மீதான வழக்குகளை நடத்த ஆகும் செலவுகள் எவ்வளவு ஆகப்போகிறதோ தெரியவில்லை. வங்கிகளிடம் மோசடி செய்துவிட்டு அவற்றுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாது, இன்னும் வழக்குகளுக்காகவும் நமது அரசுக்கு எவ்வளவு செலவாகப்போகிறதோ தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்