ஓவர்டேக் செய்ய அனுமதிக்காத கார் ஓட்டுநரைத் தாக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன்! - வைரலாகும் வீடியோ

ஓவர்டேக் செய்ய அனுமதிக்காத கார் ஓட்டுநரை பா.ஜ.க எம்.எல்.ஏவின் மகன் கடுமையாகத் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைராலாகி வருகிறது.

பாஜக

Photo Credit : ANI

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பா.ஜ.கவைச் சேர்ந்த தன் சிங் ராவத். இவருடைய மகன் ராஜா. இவர் ராஜஸ்தானில் உள்ள வித்யூத் காலனியில் தன் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, தனக்கு முன்னே சென்ற கார் ஓட்டுநர், தன்னை ஓவர் டேக் செய்ய அனுமதிக்காததால் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து தனக்கு முன்னே செல்லும் காரை வழிமறித்து, அந்த  ஓட்டுநரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மாருதி ஸ்விஃப்ட் காரை வழிமறித்து ஸ்கோர்பியோ கார் ஒன்று சாலையின் நடுவே நிற்கிறது. பா.ஜ.க எம்.எல்.ஏவின் மகன் ராஜாவும், அவரது நண்பர்களும் காரிலிருந்து இறங்கி வந்து, ஓவர்டேக் செய்ய அனுமதிக்காத கார் ஓட்டுநரை காரிலிருந்து வெளியே இழுக்கின்றனர். தொடர்ந்து அவரைக் கடுமையாகத்  தாக்குகின்றனர். கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் கூறும் போது, `நான் ஒருவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு பின்னே வந்தவர்களை ஓவர்டேக் செய்ய அனுமதிப்பதற்கு அந்த சாலையில் போதிய இடமில்லை. அதனால்தான் என்னால் அவர்களை ஓவர் டேக் செய்ய அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் மீது புகார் கொடுக்க நான் விரும்பவில்லை' என்று அவர் தெரிவித்தார்.  மேலும் இது தொடர்பாக எந்த வழக்கும் காவல்துறை தரப்பிலிருந்து பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!