'மதர் சுப்பீரியர் பதவியில் இருந்து நீக்கினார்கள்' பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரி கண்ணீர்!

பாலியல் பலாத்காரம் குறித்து புகார் செய்ததால் மதர் சுப்பீரியர் பதவியில் இருந்து தன்னை நீக்கினார்கள் என கேரளத்தில் பிஷப்பால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்தார்.

பிராங்கோ முளக்கல்

கேரள மாநிலம் கோட்டயம் சீரோ மலபார் சபையின் ஜலந்தர் மாவட்ட பிஷப் பிராங்கோ முளக்கல் 46 வயதுள்ள கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். பாலியல் பலாத்காரம் குறித்து கன்னியாஸ்திரி அளித்த புகார் குறித்தும், தன்னை கடத்த முயன்றதாக பிஷப் பிராங்கோ முளக்கல் கொடுத்த புகாரையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வைக்கம் போலீஸ் அதிகாரி சுபாஸ் கன்னியாஸ்திரியிடம் இன்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கன்னியாஸ்திரி கூறுகையில், "பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து ஆர்ச் பிஷப் கர்த்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நான் புகார் அளித்ததால் என்னுடைய மதர் சுப்பீரியர் பதவியை பறித்தார்கள். மனதளவில் என்னை பலவீனமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாகத்தான் அவர்கள் என்மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். குருவிலங்காடு மடத்துக்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து பிஷப் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை எதிர்த்த என்னை மனரீதியாக துன்புறித்தினார்" என்றார்.

இந்த நிலையில் கன்னியாஸ்திரி அளித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஆர்ச் பிஷப் மார் ஜார்ஸ் ஆலஞ்சேரி மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஜான் ஜேக்கப் என்பவர் ஐ.ஜி.க்கு அளித்த புகார் மனுவில், "கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் புகார் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பிஷப்புக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும்.  பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காகவும் ஆர்ச் பிஷப் மீது நடவடிக்கை வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!