வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (02/07/2018)

கடைசி தொடர்பு:06:30 (02/07/2018)

`கர்நாடக சட்டமன்றம் இன்று கூடுகிறது' - புயலை கிளப்புவாரா எடியூரப்பா..?

சட்டமன்றம்

கர்நாடகாவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்)  கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மே 25-ஆம் தேதி முதல்வர் குமாரசாமி தனது மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிருபித்தார். அதன்பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் சட்டமன்றம்  ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் முதலாக சட்டமன்றம்  இன்று கூடுகிறது. ஆளுநர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து வரும் 5-ஆம் தேதி மாநில  அரசின் பட்ஜெட்டை  முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்கிறார். விவசாயக் கடன் ரத்து, காவிரி பிரச்னை குறித்து முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த பிரச்னையில் அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றால்  சட்டமன்றத்தில் பிரச்னையை கிளப்ப எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதற்காக, பிஜேபி எம்.எல்.ஏ-க்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சட்டமன்றக் கூட்டம் குறித்து, கர்நாடக மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறுகையில், ''கர்நாடக சட்டமன்றம் கூட்டுக் கூட்டம் ஜூலை 2-ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆளுநர் உரையாற்றுகிறார். அதற்கு அடுத்த 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். அதைத்தொடர்ந்து 5-ஆம் தேதி பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்கிறார். முதல் நாளில் ஆளுநர் உரைக்கு பின் மேல்-சபை தனது அரங்கத்தில் கூடும். அங்கு மரணம் அடைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து மேல்-சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். மேல் அவையில் விவாதம் நடைபெறும்போது, சம்பந்தப்பட்ட துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும். இந்த கூட்டம் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறும்'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க