`விமர்சனங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை; ஆனால்...' - சுஷ்மா வேண்டுகோள்!

'மோசமான மொழியில் விமர்சனங்களைத் தெரிவிக்க வேண்டாம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

சுஷ்மா ஸ்வராஜ்

இந்து-முஸ்லீம் தம்பதிகள், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ட்விட்டரில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை டேக் செய்து ஒரு பதிவு செய்திருந்தனர். அதில், 'நாங்கள் இருவேறு மதத்தைத் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று பதிவிட்டிருந்தனர். அதனையடுத்து, லக்னோவைச் சேர்ந்த பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி விகாஷ் மிஸ்ராவை சுஷ்மா சுவராஜ் பணியிட மாற்றம் செய்தார். இஸ்லாமியருக்கு சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம் பல்வேறு தரப்பினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுஷ்மா சுவராஜ், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கண்டனங்கள் தெரிவித்தனர். அவர்கள், சமூக வலைதளங்களில் சுஷ்மா சுவராஜை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சுஷ்மாவின் கணவருக்கும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். 'இஸ்லாமியர்கள் ஒருபோதும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. பின்னர், எதற்காக சுஷ்மா சுவராஜ் இஸ்லாமியர்களுக்கு உதவுகிறார்' என்பனபோலவும் சுஷ்மா சுவராஜ் வீட்டுக்கு வந்ததும் அவரை அடிக்கவேண்டும் என்பது போல எல்லாம் திட்டி பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது,   ``ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கை தான், கருத்து வேறுபாடுகளை விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் மோசமான மொழியில் வேண்டாம். ஒழுக்கமான மொழியில் செய்யும் விமர்சனம் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறியுள்ளார். 

பா.ஜ.கவின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துவரும்போது பிரதமர் மோடி உள்பட கட்சியிலுள்ள யாரும் சுஷ்மா சுவராஜ்க்கு ஆதரவாக யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!