ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மீது தாக்குதல்..! பிரதமர் மோடி கண்டனம்

ஆப்கானிஸ்தானில், சீக்கியர்கள்மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு, இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி

கிழக்கு ஆப்கானிஸ்தான் ஜலலாபாத் நகரில், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மார்கெட்டில் சரக்கு லாரியில் வந்து இறங்கிய தற்கொலைப் படை தாக்குதல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், திடீரென தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில், 19 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள். 

ஆப்கானிஸ்தானில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருந்த சீக்கியர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மேலும், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, பல சீக்கியர்கள் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியை நேரில் சந்திக்க இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதனால், இது சீக்கியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதல் எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்குக் கடும் கண்டம் தெரிவித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று ஆப்கானிஸ்தானில் நடைபெற்றத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆப்கானிஸ்தானின் பன்முக கலாசாரத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்திற்காகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சோகமான சூழலில் இந்தியா உங்களுடன் எப்போதும் துணை நிற்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!