வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:11:20 (02/07/2018)

'மும்பையைச் சுற்றிக்காட்டுகிறேன்'- காரில் சென்ற இத்தாலி பெண்ணுக்கு டூரிஸ்ட் கைடால் நேர்ந்த சோகம்

மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவரும் இத்தாலிப் பெண் ஒருவர், காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமை

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர், மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவருகிறார். மும்பையைச் சுற்றிப் பார்ப்பதற்காக, ஜூன் 14-ம் தேதி ஜூஹூ பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர், தன்னை டூரிஸ்ட் கைடு என்று அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர், அமிதாப் பச்சனின் வீட்டைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதை நம்பி, இத்தாலிப் பெண் அவருடன் காரில் சென்றுள்ளார்.

காரில் செல்லும்போது, இடையில் மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிவந்து காரில் வைத்துக் குடித்ததோடு, இத்தாலிப் பெண்ணையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். பின்னர், அவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண், இத்தாலி தூதரகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது, இதுகுறித்து மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில், 'பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது.