வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (02/07/2018)

கடைசி தொடர்பு:12:55 (02/07/2018)

'பாலும் மெர்சிடஸ் காரும் ஒன்றா?! - ஜிஎஸ்டி விமர்சனத்துக்கு மோடி பதில்

'நாடு முழுவதும் அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே வரி விதிக்கப்பட வேண்டும்' என்ற காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில் கொடுத்திருக்கிறார். 

மோடி

நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில், கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி-யை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று, மத்திய அரசின் சார்பில் ஜி.எஸ்.டி விழா கொண்டாடப்பட்டது. ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தியபோது, தொழில் முனைவோர்களிடமிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. தொடக்கத்தில், அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அவை அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்தச் செயல், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் விமர்சனத்துக்குள்ளானது.  இந்தியாவில் மட்டும்தான் ஜி.எஸ்.டி-யில் அதிக வரி விதிக்கப்படுவதாகக் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

இந்நிலையில் நேற்று, பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் நண்பர்கள் அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே வரி விதிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அத்தியாவசியப் பொருளான பாலுக்கும் ஆடம்பரப் பொருளான மெர்சிடஸ் காருக்கும் எப்படி ஒரே வரியை விதிக்க முடியும்? ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிலேயே 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் ஒழிக்கப்பட்டு, நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 150 பொருள்களுக்கு வரியே விதிக்கப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார்.