குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்! | Five were killed by the mob for spreading rumors

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:13:20 (02/07/2018)

குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்!

மகாராஷ்டிராவில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்று கருதி 5 பேரை கிராம மக்கள் அடித்துக் கொலைசெய்துள்ளனர். இது தொடர்பாக 12 பேர் வரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

தாக்குதல்

கோப்புப்படம்

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நாடோடி இனத்தைச் சேர்ந்த 7 பேர், சோழாபூரிலிருந்து பேருந்துமூலம்  தூலே மாவட்டத்திலுள்ள ராணிபாடா கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், வீட்டிலுள்ளவர்களிடம் சாப்பிட உணவு கேட்டுள்ளனர். அதில், ஒருவர் அங்கிருந்த குழந்தையிடம் பேச முயற்சிசெய்துள்ளார். அதைப் பார்த்த கிராம மக்கள்,  குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்று கருதி, அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அதில் இரண்டு பேர் தப்பி ஓடியுள்ளனர். மீதமிருந்த 5 பேரை ஒரு அறையில் அடைத்து, செங்கல் மற்றும் கற்களைக்கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்கள், ரத்தம் கொட்ட மயங்கி விழுந்த பிறகுதான் அடிப்பதை நிறுத்தியுள்ளனர். பின்னர், தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அவர்களது உடலை மீட்டுள்ளனர். அப்போது, காவல்துறையினர் உடலை எடுக்கும்போது, அதில் இருவரது உடலை எடுக்கவிடாமல் தடுத்த கிராம மக்கள், 'அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உறுதிசெய்தால் எடுக்கவிடுவோம்' என்று தெரிவித்துள்ளனர். அதற்கு அனுமதியளிக்காத போலீஸ்காரரும் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக 12-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவும் வதந்திகளை நம்பி, நாடோடி மக்களையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் கடுமையாகத் தாக்கும் சம்பவம், நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்  தாக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அஸ்ஸாம், திரிபுரா, உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழந்தை கடத்த வந்ததாகக் கருதி, பொதுமக்கள் தாக்கும் சம்பவம் அதிகரித்துவருகிறது. இன்று சென்னையில் இரண்டு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம், குழந்தை கடத்த வந்ததாகக் கருதி, மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.