வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (02/07/2018)

கடைசி தொடர்பு:16:25 (02/07/2018)

நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்! - இன்டர்போல் அதிரடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதை திருப்பிச்செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு, இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

நீரவ் மோடி

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்ததாக சி.பி.ஐ-யிடம் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நிரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது சி.பி.ஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறது. இதனிடையே, நிரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றனர். 

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான விலை உயர்ந்த 9 சொகுசுக் கார்கள், பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர முயன்று வருகின்றனர் அதிகாரிகள். அதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்டுள்ளது இந்தியா. 

(Photo Credit - ANI)

இந்நிலையில், நிரவ் மோடியை எளிதில் பிடிக்கும் வகையில், இன்டர்போல் அமைப்பு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதனால், இன்டர்போல் அமைப்பின் பட்டியலில் உள்ள சர்வதேச நாடுகளுக்குள் அவர் சென்றால், அந்நாட்டு போலீஸார் நிரவ் மோடியைக் கைதுசெய்ய முடியும். அந்த நோட்டீஸில், நிரவ் மோடியில் பெயர், வயது, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.