காஷ்மீர் பற்றி ஐ.நா. அறிக்கை... எதிர்க்கும் இந்தியா.. என்ன நடக்கிறது? #Kashmir | india opposes UN manifesto on kashmir dispute

வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (02/07/2018)

கடைசி தொடர்பு:15:44 (02/07/2018)

காஷ்மீர் பற்றி ஐ.நா. அறிக்கை... எதிர்க்கும் இந்தியா.. என்ன நடக்கிறது? #Kashmir

காஷ்மீர்

மூன்றாண்டு கால கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டிய பிறகு, ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்திருக்கிறது. 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சியும் காஷ்மீரின் மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அமைத்தன. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முஃப்தி முஹம்மது சயீத் இறந்த பிறகு, அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்ட போது, பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ், `காஷ்மீரில் தீவிரவாதமும் வன்முறையும் தலைவிரித்து ஆடுகின்றன; மக்களின் அடிப்படை உரிமைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பத்திரிகையாளர் சுஜாத் புகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களால் எப்படி வாழ முடியும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

2017 ம் ஆண்டில் இந்திய வெளியுறவுத்துறை, `இந்தியா - பாகிஸ்தான் உறவு’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கை தரும் புள்ளி விவரங்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் காஷ்மீரில் வன்முறைகள் பெருகியுள்ளதாக உணர்த்துகின்றன. ஏறத்தாழ 800 வன்முறைச் சம்பவங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அரசு வெளியிட்டிருக்கும் எண்ணிக்கையில் ஏறத்தாழ 744 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 471 பேர் போராளிகள், 201 பேர் பாதுகாப்புப் படையினர் மற்றும் 72 பேர் பொது மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில், காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீதான கல்லெறிதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்ததற்காக 14 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளில் காஷ்மீர் முழுவதும் ஏறத்தாழ 70 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வன்முறைகளில் ஏறத்தாழ 22 ஆயிரம் போராளிகளும், ஐந்தாயிரம் பாதுகாப்புப் படை வீரர்களும், 14 ஆயிரம் பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் 1995 ம் ஆண்டு, அதிகபட்சமாக ஆறாயிரம் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2001 ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல்களில் இருபுறமும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2001 ம் ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை இரண்டாயிரம்; பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 500.

ஐநா

மத்திய அரசு இப்படியான புள்ளி விவரங்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டிருக்க, கடந்த 14 ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் அலுவலகம், காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை வெளியிட்டது. இதை வெளியிட்ட ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் ஜெய்த் ராத் அல் ஹுசைன், ``இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த முரண்பாடு லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளைக் கொள்ளையடித்ததோடு, இன்று வரை அந்த மக்களைத் துன்புறுத்தி வருகிறது. தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த வன்முறைகளை முடிவுக்குக்கொண்டு வரவும், இரண்டு நாடுகளின் முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும் வேண்டும். ஆதலால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான சபை காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

49 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, 2016 ம் ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் புர்ஹான் வானி, ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு நிகழ்ந்த போராட்டங்களிலிருந்து, 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நிகழ்ந்தவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அலுவலகத்தின் இந்த விசாரணைக்கு மத்திய அரசு 2016 ம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுத்தது. ஆனாலும், மனித உரிமைகளுக்கான இந்த விசாரணை நடத்தப்பட்டது.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை அறிக்கையின் புள்ளி விவரங்களுக்கு மாற்றாகப் பல தகவல்களைக் கொண்டுள்ளது இந்த அறிக்கை. மேலும், `பெல்லெட்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டு ஏறத்தாழ 3 ஆயிரம் மக்கள் கண் பார்வை இழந்ததையும் இந்த அறிக்கை கண்டித்துள்ளது. `புர்ஹான் வானியின் மறைவுக்குப் பிறகு, போராட்டங்களைக் கலைக்க மக்கள்மீது பல வழக்குகள் புனையப்பட்டுள்ளன’ என்றும், `இரண்டு நாடுகளும் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை அழித்து வருகின்றன’ என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை ஐ.நா.வின் இந்த அறிக்கையைப் பொய்யான தகவல்களைக் கொண்டு சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, அதன் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு இந்திய அரசு விசாரணைக்கு ஒப்புக்கொண்டால் தானும் ஒத்துழைப்பதாக அறிவித்திருக்கிறது.

செந்தில்நாதன்இந்திய வெளியுறவுத்துறை சார்பாக `இந்தியா பாகிஸ்தான் உறவு’ என்ற அறிக்கையை வெளியிட்ட குழுவில் தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் இடம்பெற்றிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``மனித உரிமை மீறல் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ராணுவத்தின் மீது கல் எறிகிறார்கள். ராணுவமும் நம் வீட்டுப் பிள்ளைகள்தானே! கடந்த ஒன்றரை மாதமாக நோன்புக் காலம் என்பதால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய அரசின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான். நியாயமாகப் பார்த்தால் ராணுவத்தைத் தாக்கியதுதான் மனித உரிமை மீறல். ராணுவம் தீவிரவாதிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்கிறதே தவிர, பொதுமக்கள்மீது எடுப்பது இல்லை. இந்திய அரசு மீது ஐ.நா சபை குற்றம் சுமத்துகிறது என்றால் மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் நம் அரசுக்கு ஆதரவு தர வேண்டும். நமது நாட்டு மண்ணைக் காப்பாற்றும் முயற்சியில், நமது ராணுவ வீரர்கள் செய்யும் உயிர்த் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக யார் அறிக்கை கொடுத்தாலும் அதை நாம் கண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், காஷ்மீரில் உள்நாட்டுப் பாதுகாப்புக்காகக் காவல்துறை இருக்கிறது; நீதிமன்றம் இருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களைக் காக்க இதுபோன்ற வழிமுறைகள் நமது ஜனநாயக அமைப்பில் இருக்கின்றன. ஐ.நா.வின் அறிக்கை சொல்வது போல 3 ஆயிரம் பேர் பார்வையிழந்திருக்கிறார்கள் என்பது இந்தியாவின் புள்ளி விவரங்களில் இல்லை” என்று கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெளிவரும் `காஷ்மீர் ரீடர்’ என்ற ஆங்கில நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் இஸார் நசீர் அலி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கது. கடந்த 70 ஆண்டுகளில், மத்திய அரசு காஷ்மீர் மக்கள்மீது வன்முறைச் செய்வதை உலக நாடுகள் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளன.

இஸார் நசீர் அலி

இத்தனை காலம் ஐ.நா சபை காஷ்மீர் தொடர்பாக எந்த நிலைப்பாடுகளையும் எடுக்காமல் மெளனம் காத்து வந்தது. ஐ.நாவின் அறிக்கையை மறுக்கும் மத்திய அரசு, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் நடத்தும் விசாரணைக்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறதே! மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் என்பது சாதாரண உள்ளூர் அமைப்பு கிடையாது. அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை என்பது உண்மைகளின் அடிப்படையிலானது. மியான்மர் நாடு ரோஹிங்கியாக்களின் மீதான இனப்படுகொலையை ஐ.நா சபை கண்டித்த போது, அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறதே.” என்றார்.  

13 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகும், எப்படித் தமிழக அரசு தூத்துக்குடியில் நடந்தவற்றை விளக்கும் அறிக்கையில், `துப்பாக்கிச் சூடு’ என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லையோ, அதுபோலவே, மூவாயிரம் பேர் பார்வையிழந்த பிறகும், மத்திய அரசின் அறிக்கை `பெல்லட்’ என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் வெளியிட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசு காஷ்மீரில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையம் நடத்தும் விசாரணைக்கு ஒப்புக்கொள்வது உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பையும், உண்மைகளையும் வெளிப்படுத்த உதவும்.


டிரெண்டிங் @ விகடன்