வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (02/07/2018)

கடைசி தொடர்பு:19:35 (02/07/2018)

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சாமானியர்களுக்கு லாபமா... ஏமாற்றமா?

ஜி எஸ் டி நடைமுறைக்கு வந்து ஓராண்டு

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST)... இந்தச் சொல்லை, கடந்த ஓராண்டுக்கு முன் நாம் கேட்டபோது, மிகவும் சிக்கலாகவும் குழப்பமானதாகவுமே உணர முடிந்தது. ``ஜி.எஸ்.டி-யால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, குறிப்பிட்ட சில பொருள்களைத் தவிர, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலை ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததும் வெகுவாகக் குறையும்" என்றெல்லாம் மத்திய-மாநில அரசுகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதுபோன்று பொருள்களின் விலை குறைந்ததா அல்லது ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தபின், கடந்த ஓராண்டில் ஜி.எஸ்.டி குறித்த குழப்பம் சாமான்ய மக்களுக்குப் புரிந்துவிட்டதா என்றால், 80 சதவிகித மக்களும் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் பதிலாக உள்ளது.

1.7.2017-க்கு முன்னர், நடுத்தர வர்க்கத்தினர் செல்லும் ஹோட்டலுக்குச் சென்று காபி குடித்தால் 40 ரூபாய் கட்டணமாக இருந்தநிலை மாறி, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு, அதே காபிக்கு 45 ரூபாய் என்று உயர்ந்திருப்பதுதான் ஜி.எஸ்.டி-யின் சாதனை என்கிறார்களா மத்திய-மாநில அரசு அதிகாரிகள். நடுத்தரமான ஹோட்டல்களில் குடும்பத்தினருடன் சாப்பிடச் செல்வோரின் நிலைமையோ இன்னும் பரிதாபம் என்பதை பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர். அதிலும் CGST, SGST என்ற பெயரில் இரண்டு சம அளவாக வரி வசூல் செய்யும் நிலை உள்ளது. உதாரணத்துக்கு 500 ரூபாய்க்கு 4 பேர் சாப்பிட்டால், ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து 550 ரூபாயாகச் செலுத்த வேண்டி உள்ளது. 

சுதந்திர இந்தியாவில் மிகப்பெரும் வரிசீர்திருத்த நடவடிக்கையாக ஜி.எஸ்.டி-யை மத்திய பி.ஜே.பி அரசு 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்தியது. இதன் மூலம் உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட சுமார் 17 மறைமுக வரிகளும் மேலும் சில வரிகளும் ஜி.எஸ்.டி என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஜி.எஸ்.டி பில் ஜி.எஸ்.டி. வரிமுறையைப் பொறுத்தமட்டில் 5%, 12%, 18% மற்றும் 28 % என்ற நான்கு விகிதங்களில் அந்த வரி விதிக்கப்படும் பொருள்களின் தன்மைக்கேற்ப வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. மக்களின் அத்தியாவசியப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் என அனைத்தும் இந்த வரம்பின்கீழ் கொண்டு வரப்பட்டன. தற்போது ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.

டெல்லியில் ஜி.எஸ்.டி தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறையைக் கூடுதலாகக் கவனித்துவரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "ஜி.எஸ்.டி-யால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றம் தற்போது தணிந்துவிட்டது. ஜி.எஸ்.டி மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அதையும் தாண்டி ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை மிகப்பெரும் வெற்றிபெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜி.எஸ்.டி மிகவும் உதவிகரமாக அமையும். வருமான வரி போன்ற நேரடி வரி வசூலை அதிகரிக்க ஜி.எஸ்.டி உதவுகிறது. நேரடி வரி வருவாய், கடந்த சில மாதங்களில் 44 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி அமலுக்கு வந்த பின்னர், வரி நடைமுறை எளிமையாக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பின்னர், முதல்முறையாக ஜி.எஸ்.டி தின நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. அவர், "பல நாடுகளில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது மிகப்பெரும் சீர்குலைவு ஏற்பட்டது. அந்தவகையில், இந்திய பொருளாதாரத்திலும் ஜி.எஸ்.டி-யால் சீர்குலைவு ஏற்படும் என்று பலரும் கருதினார்கள். ஆனால், இந்த ஓராண்டு அனுபவத்தில் அது போன்ற எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. 

மாறாக, ஜி.எஸ்.டி வந்த பின்னர், நாம் பெற்றிருக்கும் பயன்கள் குறுகிய கால அல்லது சிறப்பான நடுத்தரக்கால விளைவுகள்தான். ஏனெனில், ஜி.எஸ்.டி-யின் நிரந்தரப் பலன்கள் இனிமேல்தான் கிடைக்கும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, எளிமையான வியாபாரம், தொழில் மற்றும் வர்த்தக துறை விரிவாக்கம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்கள் மற்றும் நேர்மையான வர்த்தக நடைமுறைகளில் ஜி.எஸ்.டி நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஜி.எஸ்.டி-க்குப் பிந்தைய வரிவசூல் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வைச் சந்தித்துள்ளது. வரிவசூல் மேலும் அதிகரித்த பின்னர், கூடுதல் பலன்கள் கிடைக்கும். அதன் பின்னர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளைப் போன்று இந்தியாவிலும் அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே அடுக்கு ஜி.எஸ்.டி வரியை விதிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுவது, மிகவும் தவறான யோசனை. ஒட்டுமொத்த மக்களும் ஒரே சீரான மற்றும் அதிக வரி செலுத்தும் திறன் கொண்டவர்களாக இருக்கும் நாடுகளில் மட்டுமே இது சாத்தியம். இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளுக்கு இந்த யோசனை பலனளிக்காது என்பதால், அதை ஏற்க முடியாது. பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அந்தக் கருத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னையில் ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் மட்டுமே பெட்ரோலியப் பொருள்கள், ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டுவரப்படும்" என்றார். 

`ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு, அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்து, ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் செய்யப்பட வேண்டியவை என்னென்ன?

பொதுவாக, ஒரு புதிய நடைமுறையைப் பின்பற்றும்போது, அதில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதேபோல் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோதும் ஏராளமான குறைபாடுகள் உருவாகின. ஆனால், அவையெல்லாம் படிப்படியாகச் சரிசெய்யப்பட்டன. பல்வேறு பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது குறைந்த சதவிகித வரிவிதிப்பின் கீழ் மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, இதுவரை, ஜி.எஸ்.டி வரம்புக்குள் சேர்க்கப்படாத பொருள்கள் மற்றும் சேவைகளை, அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான், பெரும்பாலான பொருள்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் வரி தொடர்பான நிபுணர்கள்.

"குறிப்பாக மின்சாரம், மதுவகைகள், பெட்ரோலியப் பொருள்கள், ரியல் எஸ்டேட் துறை போன்றவை ஜி.எஸ்.டி வரம்புக்குள் இப்போது வரவில்லை. இவற்றில், இயற்கை எரிவாயு, விமானங்களுக்கான எரிபொருள் இந்த இரண்டையும் உடனடியாக ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டுவருவதற்கு மாநில அரசுகள் சம்மதம் தெரிவிக்காது. ஏனென்றால், மாநில அரசின் வரி வருவாய் குறையும் என்பதே அதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருள்களுக்கான வரி வருவாயை நம்பியே பல மாநில அரசுகள் செயல்படுகின்றன. ரியல் எஸ்டேட் துறையையும் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கும் வெவ்வேறு விதமான கருத்துகள் எழும்.

தற்போது நடைமுறையில் உள்ள வரி விதிப்பு அடுக்குகளில் 12 மற்றும் 18 சதவிகிதங்களில்தான் பெரும்பாலான பொருள்களும் சேவைகளும் உள்ளன. வரி சீரமைப்பு ஓரளவு கட்டுக்குள் வந்ததும், அந்த வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் 28 சதவிகிதம் என்பது மிகவும் அதிகளவாக உள்ளது. சிமென்ட், பெயின்ட், ஏ.சி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்றவை தற்காலத்தில் அத்தியாவசியப் பொருள்களாகிவிட்டதால், அவற்றுக்கு விதிக்கப்படும் வரியான 28 சதவிகிதத்தை குறைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி

மேலும் கடந்த ஓராண்டில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மிக முக்கியப் பிரச்னையாக உணரப்பட்டது, உள்ளீட்டு வரி மற்றும் ரீஃபண்ட் பெறுவதுதான். அவை தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. வரி திரும்பப் பெறுவதில் உள்ள நடைமுறை தாமதங்களைச் செம்மைப்படுத்த வேண்டும். தவிர, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜி.எஸ்.டி-க்கு பதிவு செய்துகொண்டு, அதன் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் திண்டாடுகின்றன. படிவங்களையும் பிற ஆவணங்களையும் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல்களை மேலும் எளிமைப்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்கின்றனர் நிபுணர்கள்.

மத்திய அரசு தெரிவிப்பதுபோல் ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசி, கோதுமை, மளிகைப் பொருள்கள், பால் போன்ற உணவுப் பொருள்களின் விலை குறையும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர், கடைகளில் உணவுப் பொருள்களின் விலை குறைவதற்குப் பதிலாக, அதிகரித்துள்ளது என்பதையே கள நிலவரம் காட்டுகிறது.

சரக்கு போக்குவரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க ‘இ-வே ரசீது’ முறை கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இன்னும் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் நின்றுகொண்டு பணம் பறிக்கும் நிலை நீடிக்கிறது என்கின்றனர் இத்தொழிலில் உள்ளவர்கள். 

ஜி.எஸ்.டி அமலாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், தமிழக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? 

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "ஜி.எஸ்.டி ஆண்டு தினத்தை பி.ஜே.பி மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள மக்களும் கொண்டாடுகிறார்கள். 133 நாடுகளில் இருக்கும் இதுபோன்ற மாபெரும் திட்டத்தை நம் நாட்டில் நடைமுறைப்படுத்தி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஜி.எஸ்.டி மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மாநிலங்களுக்கு வரும் வருவாய் தாமதமாகும் என்பது தவறான கருத்து. ஜி.எஸ்.டி காரணமாகப் பல பொருள்களின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. ஜி.எஸ்.டி-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாச்சாரங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும்" என்றார்.

ப.சிதம்பரம், ஸ்டாலின் கருத்து!

ப.சிதம்பரம்முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ``ஜி.எஸ்.டி-யால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகவும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவிக்கிறார். ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் நாட்டின் வேலை வாய்ப்பு சீர்குலைந்துள்ளது. இந்த வரிவிதிப்பின் வடிவம், கட்டமைப்பு முறை, வரி விதிப்பு மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாமானியர்களிடையே ஜி.எஸ்.டி என்பது கெட்ட வார்த்தையாகவே மாறியுள்ளது” என்றார். 

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பதிவில், "ஜி.எஸ்.டி-யை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்ட பின், ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஜி.எஸ்.டி., வருவாயில் மாநிலங்களுக்குக் கூடுதலாக நிதி ஒதுக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் வழிவகை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி ஆணையர் சரவணகுமார் பேசுகையில், ''ஜி.எஸ்.டி வரி விதிப்பு விகிதங்களில் மாற்றம் கொண்டு வருவது பற்றி இந்த வரிக்கான கவுன்சில் கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்படும். தற்போது வரை, நாட்டின் வரி வசூல் அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கான வருவாய் குறையும் என்பது உண்மையல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரி வருவாய் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது" என்றார்.

ஜி.எஸ்.டி சட்டவிதிகளில் உள்ள குளறுபடிகளைக் களையும்வரை, வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்க செய்திக் குறிப்பில், "ஜி.எஸ்.டி வரிக் கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு தொழில் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நடைமுறையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் பல குளறுபடிகள் உள்ளதால் வணிகர்கள் ஜி.எஸ்.டி. சட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளனர்.

ஆனால், சட்டவிதிகளை மீறும் வணிகர்களுக்கு அபராதம், வழக்கு, சிறைத்தண்டனை எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 21 வகையான சட்டவிதி மீறல்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களுக்கு பில் கொடுக்காமல் சரக்குகளை விற்பனை செய்வது, சரக்குளை விற்பனை செய்யாமல் பில் போடுவது, போலியான தகவல்களை ஜி.எஸ்.டி வரிக்கணக்கு தாக்கல் செய்யும்பபோது தெரிவிப்பது, வரியை அரசுக்கு செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ.25,000 வரை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

மேலும், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையில் ஜி.எஸ்.டி எண்ணை குறிப்பிடாவிட்டால் ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்படும். வரிக்கணக்கை தாமதமாக செலுத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.200 செலுத்த வேண்டும். சில குற்றங்களுக்கு சிறைத்தண்டனையும் உண்டு. ஆனால், ஜி.எஸ்.டி சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் வணிகர்களைச் சென்றடைவதில்லை. எனவே, ஜி.எஸ்.டி வரித்தாக்கலில் ஏற்படும் சட்ட விதிமீறல்களுக்கு வருகிற நிதி ஆண்டு வரை அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, வணிகர்களுக்கு உரிய தகவல்களைக் காலதாமதமின்றி தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பின்னர் வருவாய் உயர்ந்திருப்பதாக அரசும் குழப்பங்களுடனேயே தொடர்வதாக அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள். இந்த வரி சீர்திருத்த நடவடிக்கை சாமானியர்களுக்கு பலன் அளித்துள்ளதா அல்லது ஏமாற்றத்தைத் தந்துள்ளதா என்பது இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் அடிப்படையிலேயே தெரிய வரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்