வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:08:19 (03/07/2018)

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் நேற்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பிரதமர்  நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரத்தில் சீக்கியர் மற்றும் இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இங்கு ஒரு ஆஸ்பத்திரியை திறக்க அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி ஜூலை 1-ம் தேதி வந்திருந்தார். அவரை சந்தித்துப் பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கிய மக்களும் வந்திருந்தனர். திறப்பு விழா முடிந்ததும் அஸ்ரப் கனி, சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். 

இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், `ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஆப்கானிஸ்தானின் பன்முக கலாசாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயர நேரத்தில்  ஆப்கானிஸ்தான் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது”, என்று அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க