‘என் சகோதரருக்கு சமர்ப்பிக்கிறேன் ’- போலீஸான அட்டப்பாடி மதுவின் சகோதரி உருக்கம் | kerala Madhu’s sister get Job With State Police

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (03/07/2018)

‘என் சகோதரருக்கு சமர்ப்பிக்கிறேன் ’- போலீஸான அட்டப்பாடி மதுவின் சகோதரி உருக்கம்

திருடியதாக அடித்துக்கொல்லப்பட்ட கேரள இளைஞர் மதுவின் சகோதரி அம்மாநில காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார்.

மது


கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கடுகுமண்ணா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மது என்ற இளைஞர் கடந்த பிப்ரவரி மாதம் அங்குள்ள கடைகளில் திருடியதாகக் கூறி சிலர் அவரை அடித்துக்கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதுவைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனப் பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றது. மேலும், சமூகவலைதளங்களில் பல கருத்துகளும் பகிரப்பட்டன. பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக மதுவின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 


தற்போது மதுவின் சகோதரி சந்திரிகா, கேரள காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். இதற்கான பணி ஆணையை முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு வழங்கினார். கேரள பழங்குடியினருக்கு மொத்தம் 74 காவல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் மதுவின் சகோதரியும் ஒருவர். இதுகுறித்து பேசிய சந்திரிகா, ``என் சகோதரர் உயிருடன் இருக்கும்போதே நான் காவலர் தேர்வு எழுதியிருந்தேன். அவர் இறந்த அடுத்த நாள் எனக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. என் மொத்த குடும்பமும் மது இறந்த சோகத்தில் இருந்ததால் முதலில் நான் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள மறுத்தேன். பிறகு என் குடும்பத்தினர்தான் என்னை வற்புறுத்தி அனுப்பிவைத்தனர். சிறு வயதில் இருந்தே எனக்கு காவல்துறையில் சேர வேண்டும் என்ற கனவு இருந்தது. இன்று அது நிஜமாகியுள்ளது. இந்த வேலையை என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு அட்டபாடியில்தான் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த வேலையின் மூலம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நிச்சயம் உழைப்பேன்” என தெரிவித்தார். 


[X] Close

[X] Close