`11 பேர் தற்கொலைக்கு யார் காரணம்?' - ஆராய்கிறார் மனநல மருத்துவர் | This is the reason behind the suicide explains psychiatrist

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (03/07/2018)

கடைசி தொடர்பு:15:41 (07/07/2018)

`11 பேர் தற்கொலைக்கு யார் காரணம்?' - ஆராய்கிறார் மனநல மருத்துவர்

இறந்துபோனவர்களின் அறையிலிருந்து வீட்டின் வெளிப்புறத்தை நோக்கி 11 குழாய்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்தக் குழாய்களின் வழியே 11 பேரின் ஆன்மாக்களும் மோட்சத்துக்குச் செல்வதற்கே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.  

`11 பேர் தற்கொலைக்கு யார் காரணம்?'  - ஆராய்கிறார் மனநல மருத்துவர்

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. டெல்லி, சாந்த் நகரிலுள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். இவரது சகோதரர் லலித் பாட்டியா. படிப்பறிவு கொண்ட இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 11 பேரும் கை, கால் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதில், 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகியிருந்தனர். வயது முதிர்ந்த நாராயணிதேவி என்ற பெண் மட்டும் தரையில் படுத்தநிலையில் இறந்திருந்தார். தற்கொலை செய்துகொண்ட இந்தக் குடும்பத்தினர் வித்தியாசமான வழிபாட்டு பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, வீட்டுக்குள்ளேயே பல சின்னஞ்சிறிய கோயில்களைக் கட்டிவைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். மேலும், மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இவர்கள் இருந்துவந்துள்ளனர். இவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியிலிருந்து இவ்விஷயங்கள் தெரிய வந்திருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். மேலும், குடும்ப உறுப்பினர் அனைவரும் `மோட்சத்தை அடையும் வழி' என்ற ரீதியில் தற்கொலை முடிவை மேற்கொண்டு, அதற்காக கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே தயாராகி வந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதாவது, இறந்துபோனவர்களின் அறையிலிருந்து வீட்டின் வெளிப்புறத்தை நோக்கி 11 குழாய்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்தக் குழாய்களின் வழியே 11 பேரின் ஆன்மாக்களும் மோட்சத்துக்குச் செல்வதற்கே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.  

11 பேர் தற்கொலை

கொலையா, தற்கொலையா என்ற ரீதியில் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிய போலீஸார், தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பச் சூழ்நிலை - உறவினர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், இப்போது ஓர் இறுதியான முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதாவது, `தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில், பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருசேர மோட்சத்தை அடைவதற்கான முயற்சியாகவே இந்தத் தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது' என்ற தெளிவுக்கு வந்திருக்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணை முட்டும் சாதனைகள் படைத்துவரும் இந்த நவீன உலகிலும் இப்படியான நம்பிக்கைகள் இருக்கமுடியுமா... என்ற அதிர்ச்சிக் கேள்வி அனைவரின் மனத்திலும் எழுகிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களும் இப்படி நம்பிக்கையின் அடிப்படையில் விபரீதமான முடிவை எடுக்க முடியுமா அல்லது இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் ஏதேனும் இருக்குமா... என்பது போன்ற பல்வேறு சந்தேகக் கேள்விகளும் இவ்விவகாரத்தின் பின்னணியில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான அரவிந்த், இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, ``இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது இருவருக்கு மனச்சிதைவு நோய் (Schizophrenia) இருந்திருக்கலாம். கற்பனை உலகில் வாழ்பவர்களாக இருக்கும் இவர்கள் நிஜத்தில் நடந்திராத ஒன்றை நடந்ததாக உணரும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் (Delusion Hallucination). 

அதாவது, கடவுள் தன்னிடம் பேசுவதாகவும் அவரது ஒலி தன்னுடைய காதுகளில் கேட்பதாகவும்கூடக் கூறுவார்கள். `கடவுள் என்னைச் சொர்க்கத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார்... என்னோடு என் குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துப் போகப்போகிறேன்' என்றெல்லாம்கூடச் சொல்வார்கள். இப்படியான மனநிலை கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது நம்பிக்கைகளைக் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரப்புவர் (Shared psychosis). 

11 பேர் தற்கொலை

Images: AP

நான்கு பேர் தங்கியிருக்கும் ஓர் அறையில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால்கூட போதும்.... அந்த ஒருவரது பேச்சை நாளடைவில் மற்றவர்களும் நம்பத் தொடங்கிவிடுவார்கள். இந்த நம்பிக்கைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது ஆன்மிக ரீதியிலான நம்பிக்கைகள்தாம். எனவே, சாதாரண நிலையிலிருந்து ஒருவர் அதீதமாகக் கடவுள் நம்பிக்கையோ அல்லது மதம் சார்ந்த நடவடிக்கைகளிலோ ஈடுபட ஆரம்பித்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துப்போய் ஆலோசனை பெறவேண்டும். 

 

 

உதாரணமாக, 25 வயதில் உள்ள இளைஞன் ஒருவன் அந்த வயதுக்கே உரிய துருதுருப்புடன் ஜாலியாக நண்பர்களோடு பொழுதுபோக்குவது, சினிமாவுக்குச் செல்வது என்றிருந்தால், அது ஆரோக்கியமானது. ஆனால், அதே இளைஞன் வெளியுலகத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மிக விஷயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவனாக இருப்பானேயானால், அவனைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். `பரவாயில்லை... நல்ல கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறானே...' என்று உண்மை புரியாமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அது பின்னாளில் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடும்'' என்று எச்சரிக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்