சந்தையில் மீண்டும் சற்று உற்சாகம்; சென்செக்ஸ், நிஃப்ட்டி உயர்ந்தன 03-07-2018

சர்வதேச சந்தைகளில் நிலவிய ஓரளவு பாசிட்டிவான போக்கினாலும், ஜூன் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கண்ட விற்பனை வளர்ச்சி, மற்றும் சற்று உற்சாகமூட்டக்கூடிய விதத்தில் அமைந்த பொருளாதார அறிக்கை காரணமாகவும் இந்திய பங்குச் சந்தை இன்று முன்னேற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 114.19 புள்ளிகள், அதாவது 0.32 சதவிகிதம் உயர்ந்து 35,378.60 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 42.60 புள்ளிகள். அதாவது, 0.40 சதவிகிதம் முன்னேறி 10,699.90-ல் முடிவுற்றது.

ஆசிய சந்தைகள் ஓரளவு கலப்படமான முடிவைச் சந்தித்தாலும், ஐரோப்பியச் சந்தைகளில் இன்று பங்குகளை வாங்குவதில் ஓர் ஆர்வம் காணப்பட்டது எனலாம்.

மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா வாகன விற்பனையில், கடந்த ஜூன் மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்டதாக வந்த அறிக்கைகள் சந்தையின் முன்னேற்றத்துக்கு உதவின.

நிக்கி அறிக்கைப்படி, இந்திய உற்பத்தித் துரையின் செயல்பாடு, ஜூன் மாதம் இந்த வருடத்தில், இதுவரை காணாத வேகத்தில் முன்னேறியிருப்பது, முதலீட்டாளர்களின் மனநிலையை பாசிட்டிவாக வைத்திருக்க உதவியது.

அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த தினத்தை விட சற்று உயர்ந்து, டாலருக்கு 68.57 என முன்னேறியதும் சந்தைக்குச் சாதகமாக அமைந்தது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

சிப்லா  4.3%
பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீசஸ் 2.1%
மாருதி சுசூகி  1.9%
சன் பார்மா 1.7%
லூப்பின் 1.9%
இன்போசிஸ் 1.7%
ஹின்டால்கோ 1.7%
ஓ.என்.ஜி.சி  1.6%
டாடா மோட்டார்ஸ் 1.3%
டாக்டர் ரெட்டி'ஸ் 1.5%

இன்று, மும்பை பங்குச் சந்தையில் 1348 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1265 பங்குகள் விலை சரிந்தும், 133 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!