இடிந்துவிழுந்த அந்தேரி ரயில்வே மேம்பாலம் - ரயில் ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டுகள் | Piyush Goyal announces Rs 5 lakh reward for railway official who saved many lives in andheri bridge collapse

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (04/07/2018)

கடைசி தொடர்பு:09:26 (04/07/2018)

இடிந்துவிழுந்த அந்தேரி ரயில்வே மேம்பாலம் - ரயில் ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டுகள்

மும்பை அந்தேரியில் உள்ள ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழுந்தபோது,சாதுர்யமாகச் செயல்பட்ட ரயில் ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம்

மும்பையில், கடந்த இரண்டு நாள்களாகக் கனமழை கொட்டித்தீர்த்துவருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, வெளியில் செல்ல முடியாமல் அனைவரும் தவித்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மும்பை அந்தேரி ரயில் நிலையம்  அருகில் உள்ள கோகலே மேம்பாலம் இடிந்துவிழுந்தது. மேலும், ரயில்வே நடைபாதையின் மேற்கூரை மற்றும் உயர் மின்னழுத்தக் கம்பிகளும் ரயில்வே தண்டவாளத்தின் நடுவே அறுந்து விழுந்தன. இதனால், அந்தேரி வழியாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அந்தேரி ரயில் நிலையம், எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மும்பையின் முக்கியமான ரயில்நிலையம் ஆகும். அங்கு, ஒரு நிமிடத்துக்கு 5முதல் 6 ரயில்கள் வரை கடந்து சென்றுகொண்டே இருக்கும். இது இப்படி இருக்க, நேற்று பாலம் இடிந்துவிழும் சமயத்தில், போரிவலியில் இருந்து அந்தேரி வழியாக ஒரு மின்சார ரயில் வந்துகொண்டிருந்தது. பாலம் இடிந்ததால் மின் கம்பிகள் தண்டவாளத்தில் அறுந்து விழுவதைக் கவனித்த சந்திரசேகர் சவந் என்ற ரயில் ஓட்டுநர், துரிதமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்டு, அவசர பிரேக்கைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், விபத்துப் பகுதியிலிருந்து சரியாக 50 மீட்டர் முன்னதாகவே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநரின் இந்தச் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

பியூஸ் கோயல்

இதைத் தொடர்ந்து, விபத்துப் பகுதியை நேரில் பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ கோகலே பாலம் சுமார்  40 வருடங்கள் பழைமையானது. மும்பையில் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் அவ்வப்போது அதிகாரிகள் கவனித்துவருகின்றனர். இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்தப்படும்.” எனக் கூறினார். மேலும், சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சந்திரசேகருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதியும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவியும் அறிவித்தார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு  அரசே முழுப் பொறுப்பேற்கும் எனவும் தெரிவித்தார். ரயில் ஓட்டுநர் சந்திரசேகருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.