`அளவுகடந்த அன்பு வைத்திருந்தேன் காயத்ரி; பொய் வழக்கு போட்டுவிட்டாய்'- தற்கொலைக்கு முன்பு கணவன் உருக்கம்

செய்யாத குற்றத்துக்காக மனைவி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் மனமுடைந்து, ரயிலின்முன் பாய்ந்து கணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதுக்கு முன், செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்து, மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார் அந்த நபர். அந்த வீடியோ, இணையதளத்தில் வெளியாகி வைராலாகியுள்ளது.

செல்பி வீடியோ

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாலங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் குருவா ரெட்டி. இவர், தனது பள்ளிப்பருவ தோழியான காயத்ரி என்பவரை கடந்த 5 வருடங்களுக்குமுன் திருமணம் செய்துகொண்டார். இவருக்கும் இவரது மாமியார் வீட்டாருக்கும் இடையில் குடும்பப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குருவா ரெட்டி மீது காவல் நிலையத்தில் காயத்ரி வீட்டார் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விசாரணைக் கைதியாக காவல் நிலையத்தில் இரண்டு நாள் இருந்துள்ளார் குருவா ரெட்டி. இதனால், மனமுடைந்த அவர், விஜயவாடா ரயில்நிலையத்தில் இருதினங்களுக்குமுன், ஓடும் ரயில்முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்குமுன் அவர், செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

அதில், `என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. காயத்ரி, உன்மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தேன். ஆனால், பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் என்னை உட்கார வைத்துவிட்டாய். என் மரணத்துக்கு உன் பெற்றோர் மற்றும் உன் சகோதரர்தான் காரணம். அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள், உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். காவல் நிலையத்தில் இருந்த நாள்களை என்னால் மறக்க முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. உயிருடன் இருந்தால் மீண்டும் சந்திப்போம்' என்று மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், `குருவா ரெட்டி தற்கொலை செய்துகொண்டது கடந்த 2-ம் தேதியன்று. ஆனால், அடுத்த நாள் காலையில்தான் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர் சடலமாக தண்டவாளத்தில் மீட்கப்பட்டார். அவரது, பாக்கெட்டில் அடையாள அட்டை மற்றும் மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. அந்த போனில், தற்கொலைக்குமுன் குருவா ரெட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வீடியோவை ஆதாரமாக வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது' என்றார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!