வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (04/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (04/07/2018)

சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு!

சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, நாளைக்கு ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

சசி தரூர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர், சசி தரூருக்கு மூன்றாவது மனைவி ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் சுனந்தா புஷ்கர். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசி தரூர் கொண்ட நட்பே, சுனந்தா புஷ்கரை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்டது. இதனால், சுனந்தா புஷ்கரின் மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, சுனந்தா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில், டெல்லி நீதிமன்றத்தில் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீஸார், `சுனந்தா தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சசிதரூக்கு முன் அஞ்சல் அனுப்பியதாகவும் அதில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளதாக சசிதரூக்கு எதிராக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார் சசி தரூர். இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிதரூக்கு முன்ஜாமீன் வழங்க சிறப்பு புலனாய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.