வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:18 (07/07/2018)

இதயத்தில் இறங்கிய கத்தி.. சரிந்து விழுந்த அபிமன்யு.. கேரளாவைப் பதறவைத்த மாணவர் படுகொலை!

கேரள மாநிலத்தில் மாணவர் அமைப்புகளுக்குடையே ஏற்படும் மோதலால் கல்விக்கூடங்கள் கொலைக்களமாக மாறி வருகின்றன.

கேரள மாநிலத்தில் மாணவர் அமைப்புகளுக்கு இடையே ஏற்படும் மோதலால் கல்விக்கூடங்கள் அண்மைக்காலமாகக் கொலைக்களமாக மாறி வருகின்றன.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் அபிமன்யு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. திருவனந்தபுரத்தில் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் அமைப்பினர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னை, மோதலாக உருவெடுத்தது. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் தற்போது மாணவர் ஒருவர் கொலை செய்யப்படிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட மகாராஜாஸ் கல்லூரியில் கடந்த திங்கள்கிழமை புதிதாகச் சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக இந்திய மாணவர் கூட்டமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் கேம்பஸ் ஃப்ரென்ட் ஆகிய அமைப்புகள் போட்டிபோட்டுக்கொண்டு, சுவர் விளம்பரம் செய்திருந்தனர். கேம்பஸ் ஃப்ரென்ட் அமைப்பினர் எழுதிய சுவர் விளம்பரத்தில், எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் `மதவாத கேம்பஸ் ஃப்ரென்ட்' என மாற்றி எழுதியதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சுவர் விளம்பரம் ஒன்றை எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அழிக்க முற்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை முன்விரோதமாகக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த மோதலில், மாணவர்கள்மீது, மற்றொரு தரப்பினர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

அபிமன்யு

இந்த மோதலின்போது, எஸ்.எஃப்.ஐ. இடுக்கி மாவட்டக்குழு உறுப்பினர் அபிமன்யு, அர்ஜூன், வினீத் ஆகியோரைக் கல்லூரியின் பின்புற வாயிலில் ஒரு கும்பல் கத்தியால் குத்தியுள்ளது. இதில் அபிமன்யு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏற்கெனவே, எஸ்.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ., கேம்பஸ் ஃப்ரென்ட் அமைப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடந்திருப்பதாகக் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட அபிமன்யுவின் உடல் கல்லூரி வளாகத்தில், அஞ்சலி செலுத்துவற்காக வைக்கப்பட்டது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ- க்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். கத்திக்குத்தில் ஈடுபட்டவர்கள், கூலிப்படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கத்தியால் குத்தப்பட்ட சில நிமிடங்களில் அபிமன்யு உயிரிழந்ததாகவும், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் முன்பே அவர் உயிர் பிரிந்து விட்டதாகவும் அவரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். அபிமன்யுவின் இடது நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்து பட்டதால், இதயம் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, பல கொலைகளைச் செய்தவர்கள்தாம், இதுபோன்று ஒரே குத்தில் உயிரைப் பறிக்க முடியும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அபிமன்யுவுடன் கத்திக்குத்து காயமடைந்த அர்ஜூன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடைய உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மயக்கம் தெளிந்து கண்விழித்த அர்ஜூன், `நண்பன் அபிமன்யு எப்படி இருக்கிறான்?' எனக் கேட்டிருக்கிறார். அபிமன்யு இறந்தது குறித்து அர்ஜூனிடம் உறவினர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. மேலும், மகாராஜாஸ் கல்லூரியிலேயே தொடர்ந்து படிக்க விரும்புவதாக அர்ஜூன் தெரிவித்திருக்கிறார்.

மாணவரைக் கொலைசெய்த குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வெளியிலிருந்து கல்லூரி வளாகத்துக்குள் வந்த தீய எண்ணம் கொண்ட சிலர்தான், இந்த வெறிச்செயலைச் செய்துள்ளனர். இதுபோன்ற கொடுமைக்கு எதிராகப் பொதுமக்கள் ஒற்றுமையுடன் அணி திரளவேண்டும். கல்லூரிகளில் நிலவும் அமைதியான சூழலைக் கெடுக்கும்விதமாக இதுபோன்று சிலர் செயல்படுவதாகவும், அத்தகையவர்களை அடையாளம் கண்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

அபிமன்யு, கல்விக் கூடங்கள்

இதற்கிடையில் எர்ணாகுளம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், `கேம்பஸ் ஃப்ரென்ட் மாணவர் அமைப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை' என அறிவித்துள்ளது. மேலும் மாணவரை கொலை செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. தெரிவித்தது.

எஸ்.டி.பி.ஐ கேரள மாநிலத் தலைவர் அப்துல் மஜீஸ், ``நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் ஒன்றாகத் திரண்டு, கேம்பஸ் ப்ரென்ட் அமைப்பைச் சேர்ந்த 15 பேரைத் தாக்க முற்பட்டனர். இதனால், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காகவே கேம்பஸ் ஃபரென்ட் அமைப்பினர் எதிர்த் தாக்குதல் நடத்தினர்" என்றார். 

இந்நிலையில் அபிமன்யு கொலை வழக்கில் காவல்துறையினர் ஏற்கெனவே ஐந்து பேரைப் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் 10 பேர் குறித்த அடையாளம் தெரிய வந்திருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணியைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்விக்கூடங்களில் நடைபெறும் இதுபோன்ற படுகொலைகளால், எந்த மாணவர் அமைப்பிலும் சேராமல் லட்சியத்துடன் பயில வரும் பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, ஒட்டுமொத்த மாணவர்களின் பிரகாசமான வாழ்க்கைக்கு, அனைத்துக் கல்விக்கூடங்களையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை...!


டிரெண்டிங் @ விகடன்