வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (04/07/2018)

கடைசி தொடர்பு:17:20 (04/07/2018)

எம்.எஸ்.தோனி 2.0 - தோனி படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

கடந்த 2016 -ம் ஆண்டில் வெளிவந்த எம்.எஸ்.தோனி திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டும் அல்லாது அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் தோனியின் குழந்தைப் பருவம் தொடங்கி, கால்பந்து கோல்கீப்பர், கிரிக்கெட் விக்கெட் கீப்பர், உள்ளூர் தொடர், கிரிக்கெட் வெற்றி - தோல்வி, காதல் முதல் உலகக்கோப்பை வென்றது வரை அனைத்தையும் கண்முன் நிறுத்தியிருந்தனர் படக்குழுவினர்.

தோனி

 
இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்த சுஷாந்த் சிங், தோனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் படம் குறித்து சுஷாந்த் சிங் வட்டாரத்திலிருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இந்த இரண்டாம் பாகத்தில் 2011 உலகக்கோப்பைத் தொடரை வென்ற பிறகு, தோனியின் வாழ்க்கை குறித்து படம் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதி வரை முன்னேறியது தொடர்பாகவும் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் தன் மீதான தொடர் விமர்சனங்களுக்கு பெங்களூரு அணிக்கெதிராகச் சிறப்பாக விளையாடி சென்னை அணி வெற்றி பெற வைத்தது வரை இதில் காட்சிப்படுத்தவுள்ளார்களாம். மேலும், தற்போது வைரலாகும் தோனியின் மகள் ஸிவாவுக்கும் படத்தில் காட்சிகள் உள்ளதாம். தந்தை மகள் தொடர்பான பாசக் காட்சிகள் படத்தில் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் வீரர் தோனியைத் தாண்டி இதில் கணவர், தந்தை எனப் பல அவதாரம் எடுக்கிறார் சுஷாந்த் சிங். இப்படம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையிலும் இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது.