வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (04/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (04/07/2018)

புல்லட் ரயில் திட்டம்..! எதிர்ப்பு தெரிவிக்கும் குஜராத் விவசாயிகள்

மத்திய அரசின் புல்லட் ரயில் திட்டம் மற்றும் அதற்குக் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

புல்லட்

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று அகமதாபாத் - மும்பை இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டம். ஜப்பானின் உதவியுடன் சுமார் 1,700 கோடி டாலர் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் நடப்பாண்டில் தொடங்கப்பட்டு வரும்    2022-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மும்பை மற்றும் குஜராத் இடையில் இதற்கான முதல்கட்டப் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்காக மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக மகாராஷ்ட்ராவில் தொடங்கிய நில ஆக்கிரமிப்பு பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புல்லட் ரயில் திட்டத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மகாராஷ்ட்ராவை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நில அளவைப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக குஜராத் விவசாயிகள் சிலர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.