சந்தையில் உற்சாகம் திரும்பியது; சென்செக்ஸ், நிஃப்ட்டி 0.7 சதவிகிதம் உயர்வு 04-07-2018 | Share market for the day at close 04-07-2018

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (04/07/2018)

கடைசி தொடர்பு:18:12 (04/07/2018)

சந்தையில் உற்சாகம் திரும்பியது; சென்செக்ஸ், நிஃப்ட்டி 0.7 சதவிகிதம் உயர்வு 04-07-2018

சர்வதேச சந்தைகளில் பெரிதான முன்னேற்றம் இல்லாதபோதும், முதலீட்டாளர்கள் முக்கியப் பங்குகளை வாங்குவதில் காண்பித்த ஆர்வத்தால் இந்தியப் பங்குச் சந்தையில் இன்று பங்குகளின் விலைகள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 266.80 புள்ளிகள் அதாவது 0.75 சதவிகிதம் உயர்ந்து 35,645.40 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 70 புள்ளிகள் அதாவது 0.65 சதவிகிதம் முன்னேறி 10,769.90-ல் முடிவுற்றது. வங்கித்துறை, இன்ஷூரன்ஸ், எஜுகேஷன், மருத்துவம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வணிகம், சுற்றுலா மற்றும் உணவக நிறுவனங்கள் இவையனைத்தையும் உள்ளடக்கிய இந்திய சேவைத்துறையின் செயல்பாடு கடந்த ஜூன் மாதத்தில் கடந்த ஒரு வருடத்தில் காணாத அளவு வளர்ச்சி கண்டு, நிக்கி/ஐ.எச்.எஸ்.மார்க்கிட் சர்வீசஸ் பர்ச்சேஸிங் மேனேஜர்'ஸ் குறியீடு 52.6 என்று உயர்ந்தது சந்தையின் பாசிட்டிவான போக்குக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்தக் குறியீடு 49.6 என்று இருந்தது. 

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்திருப்பதால் அத்துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் பெரிதும் ஆர்வம் செலுத்தினர்.

மேலும், பருவ மழை காலத்தில் பயிரிடப்படும் காரிஃப் பயிர்களுக்குக் குறைந்தபட்ச சப்போர்ட் விலையை நிர்ணயம் செய்ய மத்திய அமைச்சகம் தீர்மானித்திருப்பதும் சந்தையின் இன்றைய உற்சாகமான போக்குக்கு ஒரு காரணம்.

இந்நிலையில், அமெரிக்காவும் சைனாவும் வர்த்தகப் பூசலைத் தவிர்க்கவியலாத நிலையில், சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களின் மீது சைனா விதித்திருக்கும் வரிகளும், அதே அளவு மதிப்புள்ள சீன பொருள்களின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரிகளும் வரும் வெள்ளிக்கிழமையன்று அமலுக்கு வரவிருக்கிறது. இது வர்த்தகப் பூசல் பெரிதாக ஆகக்கூடிய நிலையை உண்டாக்க வாய்ப்பிருப்பதால் ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் இன்று தொய்வான நிலையே இருந்தது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகளைத் தவிர, வங்கி, எப்.எம்.சி.ஜி., மருத்துவம் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறைகளைச் சேர்ந்த சில முக்கியப் பங்குகளும் இன்று விலை உயர்ந்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

பஜாஜ் ஆட்டோ 4.5%
லூப்பின் 3.8%
மாருதி சுசூகி 2.8%
பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீசஸ் 2.6%
எச்.டி.எஃப்.சி 2.3%
பார்தி இன்ஃப்ராடெல் 2.2%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2%
டாக்டர் ரெட்டி'ஸ் 1.9%
எச்.டி.எஃப்.சி. வங்கி 1.9%


விலை இறங்கிய பங்குகள் :

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 2.6%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 2%
சிப்லா 2%
என்.டி.பி.சி. 1.9%
வேதாந்தா 1.3%
பாரத் பெட்ரோலியம் 1.3%
ஓ.என்.ஜி.சி  1.1%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1265 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1350 பங்குகள் விலை சரிந்தும், 130  பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.