வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (04/07/2018)

கடைசி தொடர்பு:21:45 (04/07/2018)

விமானத்துக்கு காத்திருந்த இந்தியருக்கு லாட்டரியில் அடித்த 13 கோடி ரூபாய்..!

லாட்டரி

கேரளாவைச் சேர்ந்த டோஜோ மேத்யூ என்பவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் இந்தியா திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். விமானத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் அங்கு விற்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இந்தியா வந்து தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூ வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்துள்ளது.  நண்பர்கள் மூலம் இதை அறிந்த மேத்யூ அந்த லாட்டரி நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்துள்ளார். அதில் அவர் வாங்கிய லாட்டரிக்கு அந்நாட்டு மதிப்பில் 7 மில்லியன் திர்ஹம் (7 Million Dirham) பரிசுத் தொகை விழுந்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ருபாய். 

இதுகுறித்து பேசிய மேத்யூ, `இந்தியா திரும்புவதற்காக ஜூன் 24-ம் தேதி அபுதாபி விமான நிலையம் வந்தபோது ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினேன். பரிசு விழுந்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. கேரளாவில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது எனது ஆசை. இந்த ஆசை நீண்ட நாள்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. தற்போது இந்தத் தொகையைக் கொண்டு அதை நிறைவேற்றுவேன்’ எனக் கூறியுள்ளார்.