தொடர்கதையாகும் பள்ளிப் பேருந்து விபத்து! தடுக்க என்ன வழி?

சேதமடைந்துள்ள பள்ளிப் பேருந்து

Pic courtesy: Hindustan times

த்தரப்பிரதேச மாநிலத்தில் பராமரிப்பில்லாத சேதமடைந்த பள்ளிப் பேருந்தில் இருந்து விழுந்து ஆறாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த ஆறு வயது மாணவி ஸ்ருதி, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி அந்தப் பள்ளியின் பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் விழுந்து, பேருந்து சக்கரத்தில் அடிபட்டு மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் அப்போது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னரே, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூட பேருந்துகளை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டது. சேலையூர் பள்ளி மாணவி இறந்ததைப் போன்ற சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஆக்ராவில் உள்ளது பூரன்சந்த் ரமேஷ்சந்த் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஆதித்யா. பள்ளி முடிந்து வீட்டுக்கு அந்தப் பள்ளியின் பேருந்தில் சிறுவன் திரும்பிக் கொண்டிருந்தான். பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது, பேருந்து தளத்தில் சேதமடைந்த பகுதி வழியாக கீழே விழுந்ததில், பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி பரிதாபமாக உயிரிழந்தான். கேராகர் நகரில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

பள்ளி நிர்வாகம், அந்தப் பேருந்தை சரிவரப் பராமரிக்காமல் அலட்சியமாக இருந்ததே, விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதுபற்றி கேராகர் காவல்நிலைய அதிகாரி நரேந்திர சர்மா கூறுகையில், "பேருந்தின் பின்பக்க சக்கரம் சிறுவன் மீது ஏறியதில் அவன் இறந்தான். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அச்சிறுவனின் குடும்பத்தினர் இன்னும் புகார் அளிக்கவில்லை. புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யப்படும். என்றாலும் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், அந்தப் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

சிறுவன் ஆதித்யாவுடன் அதேபள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் அவனுடைய அக்கா அனுஷ்கா, "பேருந்தில் இருந்து இறங்கும் முன் ஆதித்யா, தவறி விழுந்த சம்பவத்தை நான் பார்த்தேன். பேருந்தில் உள்ள சேதம் தொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிக மோசமான நிலையில் அந்தப் பேருந்து இருப்பதையும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால், எந்தப்பயனும் இல்லை. பலமுறை நடுவழியில் அந்தப் பேருந்து பழுதடைந்து நின்றுள்ளது. நாங்கள் இறங்கி பேருந்தை தள்ளுவோம். சில நேரங்களில் எங்களுக்கு காயம் ஏற்படும்" என்று சோகத்துடன் தெரிவிக்கிறார்.

பேருந்தில் இருந்து விழுந்து சிறுவன் ஆதித்யா பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கேராகர் பகுதியில் மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். அந்தப் பேருந்து ஹிமாச்சலப் பிரதேச பதிவெண்ணைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆண்டுதோறும் கல்விக்கட்டணத்துடன், பேருந்து போக்குவரத்துக்காக குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், மாணவ-மாணவிகளின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும், பேருந்துகளைப் பராமரிக்கும் விஷயத்திலும் உரிய கவனம் செலுத்தாமல் மெத்தனம் காட்டுவதாலேயே இதுபோன்ற உயிர்ப்பலிகள் நடைபெறுகின்றன. அரசும், பள்ளி நிர்வாகமும் நினைத்தால் மட்டுமே இத்தகைய விபத்துகளைத் தடுக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!