`வீட்டில் தூங்கினால் அமைச்சர் பதவிக்கு பங்கம்!' - கர்நாடக அமைச்சரின் விநோதப் பயணம்?

அதிர்ஷ்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தினமும் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து வருகிறார் கர்நாடக அமைச்சர் எச்.டி.ரேவண்ணா. `ஜோதிடரின் ஆலோசனைப்படியே பெங்களூரு முதல் ஹோலநரசிபுரா வரையில் தினமும் பயணித்து வருகிறார்' என்கின்றனர் மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியின் நிர்வாகிகள். 

பயணம்

(Photo Credit -ANI)

கர்நாடகாவில் காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எச்.டி. ரேவண்ணா. இவர் முதல்வர் குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார். ஜோதிடத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். தனது அதிர்ஷ்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும் ஜோதிடரின் ஆலோசனைப்படி 300 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வருகிறார். முன்னதாக, `சொந்த வீட்டில் தூங்கினால், அமைச்சர் பதவிக்குப் பங்கம் வந்துவிடும் என ஜோதிடர் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனால், அவர் வீட்டில் தங்குவதில்லை' என்பன போன்ற வதந்திகளும் பரவின. இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய ரேவண்ணா, `எந்த ஜோதிடர்களும் என்னிடம் இப்படிச் சொல்லவில்லை. எனக்கு அரசு இல்லம் ஒதுக்கப்படவில்லை. அதற்காக, காத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் பணிக்காக நெடுந்தூரம் பயணித்து வருகிறேன்' என விளக்கம் அளித்துள்ளார். தற்போது ரேவண்ணாவுக்கு ஒதுக்கப்பட உள்ள பங்களாவில் முன்னாள் பொதுப்பணி துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா வசித்து வருகிறார். அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!