கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் பாஜகவினர்!

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில் பெட்ரோல் - டீசலுக்கான வரியை உயர்த்தி அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தியை பாஜக கிண்டல் செய்திருக்கிறது. 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றபின், முதல் பட்ஜெட்டை முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விவசாயிகளுக்குப் பயிர் கடன் ரூ.34 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.1.14 காசுகளும், டீசலுக்கு ரூ.1.12 காசுகளும் வரி உயர்த்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மீதான கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

கர்நாடகத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. குமாரசாமி அரசு பதவியேற்றவுடன் மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். 

ராகுல் காந்தி

இந்த விவகாரம் காங்கிரஸுக்கு தலை வலியை உருவாக்கியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பற்றி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். உடல் பயிற்சி தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ஃபிட்னஸ் சவாலுக்குப் போட்டியாக ராகுல்  'பெட்ரோல்' சவால் விடுத்திருந்தார். அது அப்போது பேசுபொருளானது. இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல் - டீசலுக்கான வரியை உயர்த்தியிருப்பதற்கு ராகுலைக் கிண்டல் செய்து ட்வீட் பதிவு செய்திருக்கிறார்கள் பாஜகவினர். 

அதில் ‘‘ராகுல் காந்தியின் பெட்ரோல் விலை குறைப்பு சவாலை யாருமே ஏற்கவில்லை. கர்நாடகாவில் பதவியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கூட, ராகுலின் சவாலை நிராகரித்துள்ளது. எந்த ஒரு தெளிவான சிந்தனையும் இல்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை கூறினால் இப்படி தான் நடக்கும்’’ எனக் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!