நட்சத்திர ஹோட்டல் கட்டும் அரசியல் தம்பதி!

உத்தரப்பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் கட்ட, அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் முடிவுசெய்துள்ளனர். 

அகிலேஷ் - டிம்பிள்

கடந்த வருடம் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், இக்கூட்டணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று, யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றார். இதன்பின் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள அகிலேஷ், பா.ஜ.க எதிர்ப்புப் போர்வையில், யாரும் எதிர்பாராத விதமாக சமாஜ்வாடியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இக்கூட்டணி, சமீபத்தில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியது. இந்நிலையில் உ.பி முன்னாள் முதல்வர்கள், தலைநகர் லக்னோவில் உள்ள விக்ரமாதித்யா மாக் பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவைக் காலிசெய்ய வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதனடிப்படையில், அகிலேஷ் யாதவ் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பங்களாவை காலிசெய்தார். ஆனால், பங்களாவைக் காலிசெய்யும்போது விலையுயர்ந்த பொருள்களை எடுத்துச்சென்றதுடன், சமையலறை உள்ளிட்ட இடங்களைச் சேதப்படுத்தியாக பா.ஜ.க அவர்மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அரசு பங்களா அமைந்திருந்த விக்ரமாதித்யா மாக் பகுதியிலேயே நட்சத்திர ஹோட்டல் கட்ட அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் முடிவு செய்துள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு, இந்தப் பகுதியில் 23 ஆயிரம் சதுர அடியில் நிலம் ஒன்றை  வாங்கியுள்ளனர். இந்த நிலத்தில்தான் நட்சத்திர ஹோட்டல் கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, லக்னோ மாநகராட்சியிடம்  ஹோட்டல் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். புதிதாகக் கட்ட உள்ள இந்த சொகுசு ஹோட்டலில், சகல வசதிகளும் இருக்கும்வண்ணம் பிரமாண்டமாகக் கட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!