"காங்கிரஸுக்கு எதிரிகள் காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்" - காட்டமான ஏ.கே அந்தோணி! | former Union Minister A.K.Antony speech about fight inside the party

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (06/07/2018)

கடைசி தொடர்பு:09:41 (06/07/2018)

"காங்கிரஸுக்கு எதிரிகள் காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்" - காட்டமான ஏ.கே அந்தோணி!

'காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகள், காங்கிரஸில்தான் இருக்கிறார்கள்' என கருணாகரன் நூற்றாண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே அந்தோணி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கருணாகரனின் நூறாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஏ.கே அந்தோணி, "கருணாகரன் காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் கோஷ்டி பூசல் இருந்ததில்லை. ஆனால் இப்போது, யதுகுலத்தவர்கள் தங்களுக்குள் மாறி மாறி அடித்துக்கொண்டதைபோல சண்டையிட்டுக்கொள்கிறார்கள். தலைவர்களின் கோஷ்டி மோதலால் காங்கிஸ் அழிந்துபோகும். காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேதான் இருக்கிறார்கள். செங்கனூர் இடைத் தேர்தலில் தோற்றதிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸை அழித்தவர்கள் இன்றைய தலைவர்கள் என அடுத்த தலைமுறை கூறும். கருணாகரன் இருந்திருந்தால், செங்கனூரில் எதிரிகளின் தந்திரத்திரத்தை உடைத்திருப்பார். இன்று தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு லட்சுமண கோடு போட வேண்டும்.

நம் கட்சி உள் விவகாரம்குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் செய்யக்கூடாது. கட்சி மேடையில் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். தலைவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். கட்சிக் கூட்டங்களில் தலைவர்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். கருணாகரன், கட்சிக் கூட்டங்களில் பாதியில் புறப்பட்டுச்சென்றதில்லை. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கட்சியினரின் கொள்கையாக இருக்க வேண்டும். கொச்சி விமான நிலையத்துக்கு கருணாகரன் பெயரைச் சூட்ட வேண்டும்." முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் இந்த அதிரடிப் பேச்சு, கேரள காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.