காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம்! - போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு | police constable deceased body found in Jammu and Kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (06/07/2018)

கடைசி தொடர்பு:10:45 (06/07/2018)

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம்! - போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

ஜம்மு-காஷ்மீரில், தீவிரவாதிகளால் நேற்று இரவு கடத்திச்செல்லப்பட்ட காவலர் ஜாவித் அகமது தார், பரிவான் பகுதியில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

போலீஸ்

(Photo Cerdit - ANI)

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம், கச்தூரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாவித் அகமது தார். இவர், காஷ்மீர் காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்துவருகிறார். மருந்து வாங்குவதுக்காக நேற்றிரவு அகமது கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியில் வந்த நான்கு தீவிரவாதிகள், ஜாவித் அகமதை கடத்திச்சென்றதாகக் கூறப்பட்டது. இதை, அப்பகுதி போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, போலீஸாரும் ராணுவத்தினரும் அகமதைத் தேடிவந்தனர். 

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள பரிவான் என்ற பகுதியில், ஜாவித் அகமதுவின் உடல் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அகமதுவை கடத்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அல்லது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதேபோன்று, கடந்த மாதம் 14-ம் தேதியன்று, ராணுவ வீரர் ஔரங்கசீப் என்பவர்  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.