வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (06/07/2018)

கடைசி தொடர்பு:11:15 (06/07/2018)

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி..! அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க ஒப்புக்கொண்ட டெல்லி துணைநிலை ஆளுநர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று சந்திக்க உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

யூனியன் பிரதேசமான டெல்லியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது மத்திய அரசால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமா என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'எல்லாத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. ஆளுநரிடம் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும்' என்று உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்பையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் அனில் பைஜாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'மாநில அரசின் ஆட்சிக்கு ஆளுநரின் அனுமதி தேவையில்லை. இருப்பினும், ஆட்சி சிறப்பாகச் செயல்பட உங்களுடைய ஒத்துழைப்பு தேவை' என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ஆளுநர் அனில் பைஜால், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதையடுத்து, இன்று மாலை 3 மணி அளவில் சந்திப்பு நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை அனில் பைஜால் சந்திக்க மறுத்ததைத் தொடர்ந்து, 5 நாள்களுக்கும் மேலாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இரண்டு அமைச்சர்கள், ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.