வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:23 (07/07/2018)

`ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறையும்' - எதிர்க்கும் அ.தி.மு.க

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தேர்தல் செலவு மிச்சமாகும் என அரசு கருதுகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் தொடர்பாகத் தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க சார்பில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதிமுக

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சட்ட ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் `அ.தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, தற்போது அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. நிலையான ஆட்சி நடத்தும் பொருட்டு மாநில மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். சட்டமன்றத்தின் ஆயுட்காலம் 2021 வரை உள்ளது. இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை ஏற்க முடியாது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், `நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அரசியல் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்' என்று கூறியுள்ளார்.