வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:51 (07/07/2018)

இரண்டு ஆண்டுகளில் இந்தியா 50 வது இடத்துக்கு முன்னேறும்! நிதி ஆயோக் தலைவர் நம்பிக்கை

இந்தியாவில் ஒரு தொழில் நிறுவனத்தால் ஒரே நாளில் பதிவு செய்துகொள்ள முடியும். அதேபோல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அரை மணி நேரத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். 

நிதி ஆயோக்

டெல்லியில் விருது வழங்கும் விழா ஒன்றில் நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ``தொழில் தொடங்குவதற்கு சிறந்த வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில் 142 வது இடத்திலிருந்து 40 இடங்களுக்குமேல் முன்னேறி 100 வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 50 வது இடத்துக்கு முன்னேறும். தொழிலை எளிமையாகத் தொடங்குவதற்காக ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான 1,300 விதிகளை நீக்கிய ஒரே நாடு இந்தியாதான். நம்முடைய இலக்கை எட்ட மாநிலங்கள் தொழில் தொடங்குவதற்கான சூழல்களை உருவாக்க வேண்டும்.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் தொழில் தொடங்குவதற்கு மாற்றங்களை உருவாக்குகின்றன. உற்பத்தி செய்யும் நாடுகளின் மையமாக உருவாவதற்கு, இந்தியா கண்டிப்பாக உலக வர்த்தகச் சங்கிலியின் அங்கமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்தியா, பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும். அதனால், போட்டிகள் அதிகரிக்கும். கார் உற்பத்திக்கு இந்தியா சிறந்த பகுதியாக உருவாகிவருகிறது. ரெனால்ட் நிறுவனம் அதனுடைய 100 ஆண்டுக்கால வரலாற்றில் ஐரோப்பிய நாட்டுக்கு வெளியில் கார் உற்பத்தி செய்தது கிடையாது. அவர்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்கின்றனர்' என்று தெரிவித்தார்.