மூன்று சாமியார்களை மீட்ட ராணுவம்! - தொடரும் வாட்ஸ்அப் வதந்திகள் | army has recuse 3 priests in Assam

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (06/07/2018)

கடைசி தொடர்பு:19:20 (06/07/2018)

மூன்று சாமியார்களை மீட்ட ராணுவம்! - தொடரும் வாட்ஸ்அப் வதந்திகள்

வாட்ஸ்அப் மூலம் பரவிய போலிச் செய்தியை நம்பி மூன்று சாமியார்களைப் பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர். அந்தக் கும்பலிடம் இருந்து அவர்களை மீட்ட ராணுவம், சாமியார்களைப் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

வாட்ஸ் அப்

(Photo Credit - Ndtv)

நாடு முழுவதும் குழந்தைக் கடத்தல் தொடர்பாக போலியான வதந்தி செய்திகள் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இதனால், வடக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள், வேலை காரணமாக வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்பவர்கள் என அப்பாவி பொதுமக்கள் தாக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. வாட்ஸ்அப் வதந்தியால் மட்டும் இதுவரையிலும் 25-க்கும் மேற்பட்டோர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தலையிட்டு, வாட்ஸ்அப் மூலம் பரவும் சர்ச்சையான வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நிறுவனத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது. இதற்கு, `வாட்ஸ்அப் செயலி வழியாகப் பகிரப்படும் வதந்திகளைத் தடுப்பது மிகவும் சவாலாக உள்ளது; இதைச் சரி செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறோம்' என்று விளக்கம் அளித்தது வாட்ஸ்அப் நிறுவனம். 

இந்நிலையில், அசாம் மாநிலம் மாஹூர் பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்று கருதி, மூன்று சாமியார்களைப் பொதுமக்கள் அடித்து உதைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `அசாம் மாநிலத்தில் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் அதிகமாகப் பரவி வருகிறது. குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஹஃப்லாங் பகுதியில் முகாமிட்டுள்ளதாகப் போலியான தகவல் வாட்ஸ்அப் மூலம் பரவியது. இதனால், மாஹூரியிலிருந்து ஹாரன்காஜோ நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த மூன்று சாமியார்களைப் பொதுமக்கள் வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். காரிலிருந்து அவர்களை இழுத்து, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அறிந்து, அங்கு வந்த ராணுவ வீரர்கள் சாமியார்களை மீட்டனர். கும்பலிடமிருந்து சாமியார்களை மீட்ட ராணுவத்தினர் அவர்களை போலீஸிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது'.