உயர்நிலையிலிருந்து தவறினாலும், லாபத்துடன் முடிந்தது சந்தை 06-07-2018 | Share market for the day at close 06-07-2018

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:39 (07/07/2018)

உயர்நிலையிலிருந்து தவறினாலும், லாபத்துடன் முடிந்தது சந்தை 06-07-2018

சிறிது நிதானமான தொடக்கத்துக்குப் பின் நன்கு முன்னேறிய இந்தியப் பங்குச் சந்தை, இடையில் சற்று வலுவிழப்பது போல் தோன்றினாலும், பல முக்கியப் பங்குகள் உயர் நிலையில் சப்போர்ட் பெற்றதால், இறுதிவரை பாசிட்டிவ் திசையிலையே இன்று பயணித்தது.

இருப்பினும், ஒரு கட்டத்தில் சுமார் 225 புள்ளிகள் மேலேறி 35,799.71 என்ற நிலையில் இருந்த மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ், இறுதியில் 83.31 புள்ளிகள் அதாவது 0.23 சதவிகிதம் லாபமே ஈட்டி 35,657.86 என முடிவுற்றது. 

தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு  22.90 புள்ளிகள் அதாவது 0.21 சதவிகிதம் லாபத்துடன் 10,772.65-ல் முடிந்தது.

நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கும் அமெரிக்க இறக்குமதிகள் மீதான சீன வரிவிதிப்பு காரணமா வர்த்தகப் பூசல் தொடங்கிவிட்ட நிலையில், முதலீட்டாளர்கள் சற்று கவனத்துடன் செயல் பட்டதால், ஆசியச் சந்தைகளில் ஒரு தெளிவற்ற போக்கே இருந்தது.

இந்நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 34 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்களின் மீதான அமெரிக்க வரி தற்போது அமலுக்கு வந்திருக்கிறது.

ஓரளவு உற்சாகமூட்டக்கூடிய அளவில் அமைந்த சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார அறிக்கைகள் காரணமாக ஐரோப்பிய சந்தைகள் சற்று ஏறுமுகம் கண்டிருக்கின்றன.

இன்று வெளிவரவிருக்கும் அமெரிக்கா ஜாப்ஸ் ரிப்போர்ட் குறித்த எதிர்பார்ப்பு மற்றும், இந்த வருடம் மேலும் அறிவிக்கப்படக்கூடிய அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த கவலை காரணமாக இந்தியச் சந்தையில் ஓர் எச்சரிக்கை உணர்வுடனேயே முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.

மேலும், வரும் வாரத்திலிருந்து, இந்திய நிறுவனங்களின் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான செயல்பாடு குறித்த அறிக்கைகள் வெளிவர இருக்கின்ற நிலையில், பெரிதாக எந்த முதலீடு குறித்த முடிவும் எடுக்க முதலீட்டாளர்கள் தயாராக இல்லை எனவும் கூறலாம்.

ஜூன் மாதத்தில் வாகன விற்பனை நன்கு இருந்த காரணத்தால், ஆட்டோமொபைல் பங்குகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்தன. கேப்பிடல் கூட்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் ஆயில் துறை பங்குகளும் சிறிது முன்னேறின.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்  4.6%
டாடா மோட்டார்ஸ் 3.7%
ஹீரோ மோட்டோகார்ப்  4.3%
பஜாஜ் ஆட்டோ  1.8%
மஹிந்திரா & மஹிந்திரா 1.6%
அசோக் லேலண்ட் 5.7%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 1.9%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  1.7%
தமிழ் நாடு பெட்ரோ 20%
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்  9%
பாரத் எலக்ட்ரானிக்ஸ்   8.4%
வீ  மார்ட் ரீடைல்  8%
அதானி பவர் 6.7%
ஜெயின் இரிகேஷன்ஸ் 6.3%

விலை இறங்கிய பங்குகள் :

சிப்லா  2.2%
டெக் மஹிந்திரா 1.8%
ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் 3.4%
ஆரக்கிள் ஃபைனான்ஸ் 2.4%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1451 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1188 பங்குகள் விலை சரிந்தும், 142 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.