வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:17 (07/07/2018)

இந்தியா கச்சா எண்ணெய்யை பூமிக்கடியில் குகைகளில் சேமிப்பது உண்மையா?

பூமிக்கடியில் குகைகளில் கச்சா எண்ணெய்யைச் சேமிக்கும் யோசனையானது 1990-ம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பின்னர்தான் தோன்றியுள்ளது.

இந்தியா கச்சா எண்ணெய்யை பூமிக்கடியில் குகைகளில் சேமிப்பது உண்மையா?

``50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கண்ணே", ``30 ரூபாய்க்குப் பெட்ரோல் போடுங்கண்ணே", இந்தக் குரல்களைத்தான் நிறைய பெட்ரோல் பங்குகளில் கேட்டிருப்போம். உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தெரியாமலே இப்படி 30, 50 என பெட்ரோல் டாங்குகளை நிரப்பிக்கொண்டிருப்பது வழக்கம். ஸ்கூட்டரும் கார்களுமாக இந்தியச் சாலைகளை நிறைத்து ஓடிக்கொண்டிருக்கின்றன. பெட்ரோல், டீசலின் இந்தியாவுக்கானத் தேவையும் வருடா வருடம் அதிகமாகிக்கொண்டேதானிருக்கின்றன. ஆனால், மற்ற அன்றாடத் தேவைப் பொருள்களைப்போல சட்டென விலையேறாமல் ஐம்பது பைசா, ஒரு ரூபாயாக விலையேறுவதுதான் இதன் ஸ்பெஷல். அப்படியிருந்தும் பெட்ரோல் விலையேற்றம் என்பது சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைப் பாதிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இது போதாது என்று பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்கான சண்டை பல்வேறு நாடுகளிடையே நடந்துவருகிறது. கச்சா எண்ணெய் கையிருப்பு எந்த நாட்டிடம் அதிகமாக இருக்கிறதோ அந்நாடு அந்நியச் செலவாணியிலும் பண மதிப்பிலும் அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு நீண்ட நாள் தீர்வாகவும் இறக்குமதியைக் குறைத்து அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தவும் இந்தியா சில முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக இந்தியாவின் குகைகளில் எண்ணெய்யைச் சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளது

இந்தியா முழுவதும் ஏற்கெனவே மூன்று இடங்களில் இதுபோன்று எண்ணெய்யைச் சேமிக்கும் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் 1.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யும் மங்களூரில் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யும் படூரில் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்யும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சேமிப்பு கிடங்குகளைச் சேர்த்து 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா கையிருப்பில் வைத்துள்ளது. மேலும் புதியதாக ஒடிஷாவின் சண்டிகோல் பகுதியில் 2.2 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்குக் எண்ணெய்யை பூமிக்கடியில் குகையில் சேமிக்கவும் கர்நாடகாவின் படூரில் மேலும் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைச் சேமிக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இரண்டு புதிய சேமிப்பு குகைகளின் மூலம் 6.5 மில்லியன் மெட்ரிக் டன்  எண்ணெய்யை இருப்பில் வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். 

கச்சா எண்ணெய்

பூமிக்கடியில் குகைகளில் எண்ணெய்யைச் சேமிக்கும் யோசனையானது 1990-ம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பின்னர்தான் தோன்றியுள்ளது. 1990-ம் ஆண்டு வளைகுடா நாடுகளிடையே யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதைய நேரத்தில் இந்தியாவின் கையிருப்பில் இருந்த எண்ணெய்யானது அடுத்த மூன்று நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அந்நேரத்தில் மிக அதிக விலைக்கு பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய்யை வாங்கினார்கள். இந்தியாவும் அதைத்தான் செய்தது. இதன் விளைவாக 1991-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி 1.2 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஆனால் கடந்த ஜூன் 15-ம் தேதி கணக்கின்படி இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி மதிப்பு 410.07 பில்லியன் டாலர்கள். அப்போதைய காலத்துக்கு ஒப்பிடும்போது இந்த மதிப்பு நல்லதுதான். ஆனால், இந்தியாவின் அந்நியச் செலாவணியில் எண்ணெய்ச் சந்தை தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் உலகமயமாக்கலுக்கு மாறியபோதுதான் இந்த எண்ணெய்ச் சேமிப்புக் கிடங்கு முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. 1998-ல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில்தான் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு பற்றிய முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 

ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும் மற்ற மூன்று சேமிப்புக் கிடங்குகள் 4,100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டவை. மேலும் இரண்டு கச்சா எண்ணெய்ச் சேமிப்பு கிடங்குக்கு அனுமதி கொடுத்ததின் மூலம் நெருக்கடியான நேரங்களில் 12 நாள்களிலிருந்து 22 நாள்கள் வரை இந்தியா தாக்குப் பிடிக்கலாம். சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்க நாடு என உலகின் பல நாடுகளும் இம்முறையில் எண்ணெய்யைச் சேமித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை உயர்வுக்கான நீண்டநாள் தீர்வாக இதைப் பார்த்தாலும் பூமிக்கடியில் இருக்கும் குகைகளில் எண்ணெய்யைச் சேமிப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து தரலாம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியாவது பெட்ரோல் விலை குறைந்தால் நல்லதுதான்.


டிரெண்டிங் @ விகடன்